12 அடி நீள ராஜநாகம்... பயணிகள் பீதி... பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறையினர்
🎬 Watch Now: Feature Video
தென்காசி: தமிழ்நாட்டின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக தென்காசி மாவட்டத்திலுள்ள குற்றாலம் விளங்கி வருகிறது. தொடர் மழையின் காரணமாக இப்பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகள் என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் குற்றாலம் நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு அடுத்து, இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இப்பகுதியிலுள்ள கோயில்களுக்கும் சென்று வழிபாடு செய்கின்றனர். இந்நிலையில் இன்று (செப்.18) விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் வழக்கத்தைவிடச் சற்று அதிகரித்து இருந்தது. இந்நிலையில், வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்கள், குற்றால நாதர் கோயில் அலுவலகத்திற்கு அருகில் 12 அடி நீளம் கொண்ட ராஜ நாகம் ஒன்று இருந்ததைக் கண்டுள்ளனர்.
பதற்றமடைந்த பொதுமக்கள் இதுகுறித்து அப்பகுதி தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர், விஷத்தன்மை நிறைந்த ராஜநாகத்தை உயிருடன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.