காஞ்சிபுரம் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து! - மேல்கதிர்பூர் ஊராட்சி
🎬 Watch Now: Feature Video
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மேல் கதிர்பூர் ஊராட்சியில் மணிகண்டன் என்பவருக்குச் சொந்தமான பிளாஸ்டிக் கோணிப்பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. பிளாஸ்டிக் கோணிப் பைகளுக்கான பிளாஸ்டிக்கை பல்வேறு தொழிற்சாலைகளிலிருந்து வாங்கி வந்து, தன்னுடைய தொழிற்சாலையில் பெரிய பெரிய பைகளாகத் தைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு ஆர்டரின் பேரில் அனுப்பி வருகிறார் மணிகண்டன்.
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக நிலவி வரும் அதிக வெப்பச் சலனம் காரணமாக, நேற்று இரவு (ஆகஸ்ட் 02) மணிகண்டனின் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கோணிப் பைகள் திடீரென தீப்பிடித்து எரியத் துவங்கின. கிடங்கிலிருந்த பொருட்கள் அனைத்துமே பிளாஸ்டிக் தொடர்புடைய பொருட்கள் என்பதால் தீ மளமளவென பரவியது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தார். அதனைத் தொடர்ந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கு பிளாஸ்டிக் கோணிப்பைகள் வைக்கப்பட்டிருந்த ஐந்து லாரிகள் தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கை காரணமாகத் தீயில் சிக்குவதிலிருந்து காப்பாற்றப்பட்டன.
இந்த தீ விபத்தில் தொழிலாளர்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் கோணிப்பைகள் மற்றும் கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது. இது தொடர்பாக பாலு செட்டி சத்திரம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.