காட்பாடி, வேலூர்: முல்லைப் பெரியாறு அணை உறுதி தன்மை தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
காட்பாடியை அடுத்த அரும்பருதி கிராமத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் சுமார் ரூ 13.57 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் சென்றடையும் வகையில் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். குறிப்பாக வேலூர் மாவட்டத்தில் வேளாண்மைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளித்து நீர்வரத்து கால்வாய்கள் புதுப்பிக்கப்படும் வருகின்றன. ஓட்டுப் போட்டவர் போடாதவர் எல்லாருக்கும் நான் தான் தாய். ஓட்டு போடாதவர்கள் இடத்தில் கூட நல்ல எண்ணத்தை பெற வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகாலம் காட்பாடி தொகுதியில் மக்களோடு மக்களாக இருந்து வருகிறேன். எனவே எனக்கு திமுக அதிமுக காங்கிரஸ் கட்சி பாகுபாடு இல்லாமல் பொதுமக்களுக்கு எதை வேண்டுமோ அதை செய்து வருகிறேன். ஓட்டு போட்டாலும் சரி போடாவிட்டாலும் சரி எல்லாருக்கும் நான் செய்வேன். என்னை திட்டினாலும் நம்ம ஊரு காரன் தான் திட்டினான் என்று நினைத்துக்கொண்டு போகிறவன் நான் என்று பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையின் உறுதித்தன்மை குறித்து கேரளா அரசு சொல்வது பொய்யான தகவல். அணை உறுதியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அது தொடர்பான வழக்கை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தும்" என்றார்.
தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய தண்ணீரை வழங்காமல் கர்நாடகாவும் இழுத்தடிப்பதாக கூறப்படுகிறது என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "மழைக் காலத்தில் விடப்படும் தண்ணீரை சேர்த்து அவர்கள் கணக்கை காட்டி விடுவார்கள்" என்றார்
பாலாற்றில் தோல் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது குறித்த கேள்விக்கு, "அரசு தான் அதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்றார்
தமிழ்நாட்டிலிருந்து கனிம வளங்கள் கர்நாடகவுக்கு நடத்தப்படுவதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் தலைவர் யுவராஜ் குற்றம் சாட்டியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "யுவராஜின் ஆட்கள் கடத்தாமல் இருந்தால் சரி தான்" என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.