போடியில் மழையால் செடியிலேயே அழுகி வீணான செவ்வந்தி பூக்கள்.. டிராக்டர் மூலம் அழிக்கும் விவசாயிகள்! - மழையால் அழுகிய செவ்வந்தி பூக்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Nov 23, 2023, 2:20 PM IST
தேனி: போடிநாயக்கனூர் அருகே மழையால் செவ்வந்தி பூக்கள் செடியிலேயே அழுகி வந்த நிலையில், பூக்களுக்கு போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் இழப்பைச் சந்தித்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அருகே அமைந்துள்ள மீனாட்சிபுரம் பகுதியில், மஞ்சள் செவ்வந்தி மற்றும் வீரிய ரக வெள்ளை நிற செவ்வந்தி பூக்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டு வருகிறது.
கடந்த தீபாவளி வரை வீரிய ஒட்டு ரக செவ்வந்தி பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 100 முதல் 110 வரை விற்கப்பட்டது. அதேபோல், இரண்டாம் ரக செவ்வந்தி பூக்கள் கிலோ ஒன்றுக்கு ரூபாய் 70 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த பத்து நாட்களுக்கு முன்பு பெய்து வந்த மழையால், செவ்வந்திப் பூச்செடிகள் பெருமளவில் அழுகி பாதிக்கப்பட்டது. இதனால் பூக்களும் செடியிலேயே அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தற்போது இப்பகுதியில் விளையும் முதல் ரக செவ்வந்திப் பூக்கள், கிலோ ஒன்றுக்கு ரூ.70 முதல் 80 வரையிலும், இரண்டாவது ரக செவ்வந்திப் பூக்கள் கிலோ ஒன்றிற்கு ரூ. 40 முதல் 50 வரை எனவும் குறைந்த விலைக்கு வியாபாரிகள், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.
மேலும், பூப்பறிக்க கூலியாட்கள் சம்பளத்திற்கே பூக்கள் உற்பத்தி இல்லாத நிலையில், போதிய விலையும் விளைச்சலும் இல்லை என விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனால், தற்போது விவசாயிகள் மழையால் அழுகிப் போன செடிகளை டிராக்டர் மூலம் உழுது அழித்துவிட்டு, புதிய நாற்றுக்களை பயிரிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.