Tenkasi: கடையம் அருகே குழாய் உடைந்து சாலையில் வீணாக கசிந்த தண்ணீர்!
🎬 Watch Now: Feature Video
தென்காசி: நெல்லை மாவட்டம், பாபநாசத்திலிருந்து ஆம்பூர், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், கடையம், மாதாபுரம் ஆகியப் பகுதிகள் வழியாக தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் ராட்சத குழாய்கள் மூலம் தென்காசி, செங்கோட்டை ஆகியப் பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்த குடிநீர் குழாய்களில் அவ்வப்போது உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகும் சம்பவம் வாடிக்கையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட குழாயில் திடீரென ஏற்பட்ட உடைப்பால், பூமிக்கு அடியில் உள்ள ராட்சத குழாயிலிருந்து தண்ணீர் கசிந்து, சாலையில் ஆறாக பெருக்கெடுத்து பல மணி நேரம் வீணாக ஓடியுள்ளது. சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு சாலையில் இந்தக் கசிவு தண்ணீர் ஓடியுள்ளது.
சாலை முழுவதும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதை மக்கள் வியப்புடன் பார்த்தனர். பின்னர் இது குறித்து குடிநீர் வடிகால் வாரியத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டு மோட்டார் சேவையை நிறுத்தியவுடன் தண்ணீர் வீணானது தடுக்கப்பட்டது. இருப்பினும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகச் சென்றுள்ளது. பருவமழை தாமதத்தால் கடையத்தைச் சுற்றியுள்ள அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத சூழலில், இப்படிப்பட்ட நிலையில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.