இரவில் புகுந்த யானைக் கூட்டம்: அறுவடைக்குத் தயாராக இருந்த மாம்பழங்கள் சேதம் - ponnampalli seithikal
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த தமிழக - ஆந்திர எல்லை மலைப்பகுதியில் உள்ள பொன்னப்பல்லி கிராமத்தில் இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் யானைக் கூட்டம் விவசாய நிலத்தில் புகுந்து மரங்களை சேதப்படுத்தி உள்ளது.
காட்டு யானைக்கூட்டம் குருசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் போடப்பட்டிருந்த முள்வேலிகளை உடைத்து அங்கு பயிரிடப்பட்டிருந்த தென்னங்கன்று மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. அதனைத்தொடர்ந்து யானைக்கூட்டம் வனப்பகுதியை ஒட்டியுள்ள மாந்தோப்பிற்குச் சென்று அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த மாம்பழங்களையும் மாமரத்தையும் உடைத்தெறிந்து சேதப்படுத்தியுள்ளது என ஊர் மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் வனத்துறையினருக்குத் தகவல் அளித்தனர்.தகவலின் பேரில் விரைந்த வனத்துறையினர், தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் யானைக் கூட்டத்தின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த குருசாமி என்பவர் கூறுகையில், ’கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இல்லை, தற்போது குடியாத்தம் பகுதியிலிருந்து யானைக் கூட்டம் பொன்னப்பல்லி கிராமத்திற்கு வந்துள்ளது. மாமரம் தென்னை மற்றும் வாழை ஆகிய மரங்களை சேதப்படுத்தியுள்ளது.
மேலும் யானைக் கூட்டத்தை ஆந்திர வனப்பகுதிக்கு விரட்டி, மீண்டும் தமிழக எல்லைக்குள் வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்’ என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அப்பகுதி விவசாயிகள் யானைக் கூட்டத்தை வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க:ஆஷாட நவராத்திரி: தஞ்சையில் வராஹி அம்மனுக்கு வளையல் அலங்காரம்!