கனமழையால் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சியின் ரம்மியமான கழுகுப்பார்வை காட்சிகள்! - Kodaikanal falls
🎬 Watch Now: Feature Video


Published : Dec 7, 2023, 12:11 PM IST
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக முக்கிய அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் நிலவி வரும் குளுமையான சூழல் மற்றும் அங்குள்ள சுற்றுலாத் தளங்களின் காரணமாக, அப்பகுதிக்கு ஆண்டுதோறும் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், ஆண்டு முழுவதும் இதமான தட்பவெப்பம் நிலவும் கொடைக்கானலில், பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானலில் உள்ள அருவிகள் மற்றும் நீர் தேக்கங்களில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால், அருவிகளில் நீரானது ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
அதிக நீர்வரத்தால் கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் அருவிகளான வெள்ளி அருவி, வட்டக்கானல் அருவி, புலவிச்சாறு அருவி, அஞ்சுவீடு அருவி உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்தும், பெருக்கெடுத்தும் ஓடுகிறது. எனவே, கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், வழக்கத்தைக் காட்டிலும் அப்பகுதியில் குளுமையான சூழல் நிலவி வருகிறது.