''கலைஞர் ஆட்சியில் மூடை முடையாக அரிசி பருப்புகளை தூக்கிச் சென்றேன்'' - மாமூல் கேட்டு மிரட்டிய திமுக நிர்வாகி
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா டிடி 487 திண்டுக்கல் மாவட்ட நுகர்வோர் மொத்த விற்பனை பண்டக சாலையில் ஊழியராக பணியாற்றுபவர், மேனகா (32). இந்த நுகர்வோர் பண்டக சாலையில் மொத்தம் ஆயிரத்து 233 ரேஷன் கார்டுகள் உள்ளன. சந்தைப்பேட்டை, நேருஜி நகர், வசந்தா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இங்கு பொருள்களை வாங்குவது வழக்கம்.
மேனகா நேற்று ( ஏப்.19 ) தனது பணியை செய்து கொண்டிருந்தபோது, வேடசந்தூர் திமுக நிர்வாகி அமீர் பாட்ஷா என்பவர் மாமூல் கேட்டு மேனகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ''உன்னால் முடிந்ததை பார். தற்போது இருப்பவர் சின்ன முதலமைச்சர். நாங்கள் பெரிய முதலமைச்சர் கலைஞர் இருந்தபோது மூடை மூடையாக, பெட்டி பெட்டியாக அரிசி பருப்புகளை அப்போது இருந்த நகராட்சி நிர்வாகி அன்வரை வைத்து தூக்கிச்சென்றோம். நானும் பெட்டி பெட்டியாக வீட்டுக்கு தூக்கிச் சென்றேன்'' என்று பகிரங்கமாக வாக்குமூலம் அளித்தார்.
மேலும், ''இரண்டு பாக்கெட் எண்ணெய் இல்லை என்று சொல்கிறாய். நீ என்ன சேல்ஸ்மேன்'' என அரசு அதிகாரியை ஒருமையில் பேசியும் எச்சரித்தார். விற்பனையாளரை பார்த்து, “நீ ஒன்னாம் நம்பர் நாடகம், மனோகர் இரண்டாம் நம்பர் நாடகம். என்னிடம் விளையாட்டுத்தனமாக விளையாட வேண்டாம். விபரீதம் ஆகிவிடும்” என்றும் எச்சரித்துப் பேசினார். திமுக ஆட்சியில் அரசு அதிகாரிகள் பயந்து பயந்து வேலை பார்ப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகத்திற்குள் நடந்த பிரச்னைக்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும்? முதலமைச்சர் காரசார வாதம்