கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள்: விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்த கோவை ஆட்சியர்!
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோவையில் நடக்க உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் குறித்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் இன்று கொடி அசைத்து துவக்கி வைக்கப்பட்டது.
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் ஜன.19ம் தேதி முதல் 31ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. சென்னை, கோவை, மதுரை திருச்சி ஆகிய நான்கு மாவட்டங்களில் நடைபெற உள்ள இந்த போட்டி குறித்து பொது மக்கள் இடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இரண்டு விழிப்புணர்வு வாகனங்கள் துவக்கி வைக்கப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் ஆகியோர் வாகனத்தை பார்வையிட்டு, கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.
கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர்கள், விளையாட்டு அணி மாணவர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் வீரமங்கை வேடமிட்ட இருவர், அனைவரையும் உற்சாகப்படுத்தினர். விழிப்புணர்வு வாகனங்கள் இரண்டும், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் எனவும் அதனை தொடர்ந்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.