வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் காரணமாக 3 நாட்களாக தூங்கவில்லை - டிஜிபி
🎬 Watch Now: Feature Video
சென்னை அசோக் நகர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில், தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். அப்போது அவர், 10ஆம் வகுப்பு படித்து வரும் 600 மாணவிகளுக்கு, தேர்வின் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். அவ்வப்போது அறிவியல் துறை சார்ந்த கேள்விகளைக் கேட்டு, அதற்கு பதில் அளிக்கும் மாணவிகளுக்கு தனது கையொப்பமிட்ட புத்தகங்களை பரிசாக வழங்கினார். தொடர்ந்து நிகழ்வில் பேசிய டிஜிபி சைலேந்திரபாபு, “நான் அரசுப் பள்ளியில் படித்தவன்தான். எனது என்சிசி மாஸ்டர் ராமசாமியைப்போல் சீருடை அணிய வேண்டும் என்று எண்ணினேன்.
அந்த ஆசையின்படி காவல் அதிகாரியாகி இந்த நிலைக்கு உயர்ந்துள்ளேன். அதனால்தான் சொல்கிறேன், அரசுப் பள்ளியில் படித்தால் பெரிய பதவிக்கு வர முடியாது என்று யாரும் எண்ணி விட வேண்டாம். நான் இருக்கும் பொறுப்பில் 8 கோடி தமிழ்நாட்டு மக்களை காப்பதற்காக கடமை ஆற்றி வருகிறேன். எனக்கு கீழ் உள்ள ஒன்றரை லட்சம் காவல் துறை அதிகாரிகளை மேற்பார்வை செய்து வருகிறேன்.
இந்தப் பொறுப்பில் இருப்பதால்தான் தினந்தோறும் காலை 5 மணிக்கு எழுந்து, 7 செய்தித்தாள்களைப் படிக்கிறேன். அப்போதுதான் உடனுக்குடன் தகவலைத் தெரிந்து நடவடிக்கை எடுக்க முடியும். சமீபத்தில் வடமாநிலத் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மூன்று நாட்கள் உறங்காமல் பணி செய்தேன். உடனுக்குடன் சமூக வலைதளங்கள் மூலம் போலியான வீடியோக்கள் குறித்து விழிப்புணர்வு வழங்கி, பிரச்னை உருவாகாமல் தடுக்கப்பட்டது. தாய், தந்தையர் உங்களை நேசிக்கிறார்கள். அவர்களை நீங்கள் நேசிப்பவராக இருந்தால், நன்கு படித்து விஞ்ஞானியாக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியாக, மருத்துவராக, என்ஜினியராக உங்களை உயர்த்திக் கொள்வதோடு, தங்கள் பணியை மகிழ்ச்சியாக செய்தால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்” என தெரிவித்தார்.