ஆடி அமாவாசை: சுருளி அருவியில் தர்ப்பணம் செய்ய அலைமோதிய மக்கள் கூட்டம்!
🎬 Watch Now: Feature Video
தேனி மாவட்டம் கம்பம் மேற்குதொடர்ச்சிமலைப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவி சுற்றுலாத்தலமாகவும், ஆன்மீக தலமாகவும் விளங்கி வருகிறது. தமிழ்நாடு மற்றும் கேரளப் பகுதியிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து அருவியில் குளித்துவிட்டு இறை வழிபாடு செய்து விட்டுச் செல்கின்றனர். மேலும், தை மற்றும் ஆடி மாத அமாவாசை நாட்களில் தங்களது முன்னோர்களுக்கு சுருளி ஆற்றில் தர்ப்பணம் செய்வது வழக்கம்.
அதன்படி நேற்று (ஜூலை 17) ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகாலையிலேயே சுருளி அருவியில் குவிந்த ஏராளமான பக்தர்கள் அருவியில் நீராடி பிண்டம் வைத்து எள் தண்ணீர் விட்டு தங்களது முன்னோர்கள் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டி சம்பிரதாயங்களை செய்து விட்டு, தங்களது இல்லத்தில் இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.
பின்னர் பூதநாராயணன் கோயிலில் நவதானியம் வைத்து வழிபாடு நடத்தியதுடன், இங்குள்ள சிவன் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு புனித நீரினை பக்தர்கள் தங்களது இல்லங்களுக்கு எடுத்துச் சென்றனர். மேலும், ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்களின் கூட்ட நெரிசலை சரி செய்வதற்காக ஏராளமான போலீசார் சுருளி அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.