ஆடி வெள்ளி: தருமபுரியில் புற்றில் முட்டை, பால் ஊற்றி வழிபட்ட பெண்கள்! - today news
🎬 Watch Now: Feature Video

தருமபுரி: ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என இந்து ஆன்மீக பக்தர்களாகள் நம்பப்படுகிறது. ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் தீமிதி திருவிழா, தேர்த் திருவிழா என அனைத்து திருவிழாக்களும் நடைபெறும். இந்த மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு செய்வதால் திருமணமான பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். கணவரின் ஆயுள் கூடும், மணமாகாத பெண்களுக்கு திருமண பாக்கியம் கைக்கூடும். மணமாகி குழந்தையில்லாத தம்பதியருக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கன்னிப் பெண்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி புற்று நாகர் கோயிலில் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
புற்றுக் கோயிலில் தல விருட்சமாக ஓங்கி செழித்து வளர்ந்த வேப்ப மரத்தை சுற்றி அமைந்துள்ள புற்றில் பெண்கள் முட்டை வைத்து பால் ஊற்றியும், சிலைகளுக்கு அபிஷேகம் செய்தும் மஞ்சள், குங்குமம் இட்டு வழிபாடு நடத்தினர். விரதம் இருந்து பூஜை செய்த சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பின்னர் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமாக கூல் வழங்கப்பட்டது.