அண்ணாமலையார் கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ஊழியர்கள் - சர்ச்சை வீடியோ வைரல்!
🎬 Watch Now: Feature Video
திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாகவும் விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவில் அலுவல்களுக்காக அண்ணாமலையார் கோவிலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணாமலையார் கோவிலில் 3ஆம் பிரகாரத்தில் இருக்கும் அண்ணாமலையார் பாதம் கோபுரத்திற்கு அருகில் உள்ள இடத்தில், அப்பு என்ற கோயில் ஊழியருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. கோவிலில் பணிபுரியும் ஊழியர்கள், கோயில் வளாகத்திற்குள்ளேயே சக ஊழியருக்கு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். மேலும் அதனை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊழியர்கள் அண்ணாமலையார் கோவிலின் உரிமையாளர்கள் போல, கோவில் வளாகத்திற்குள்ளேயே கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடியது கண்டிக்கத்தக்கது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று (மே.2) திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் வழங்கப்பட்ட விபூதி பிரசாத பாக்கெட்டில் அன்னை தெரசா படம் இருந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது கோவிலுக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.