பழனியில் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தருக்கு திடீர் நெஞ்சுவலி; கோயில் வளாகத்திலே உயிரிழந்த பரிதாபம்

By

Published : Apr 9, 2023, 6:50 PM IST

thumbnail

திண்டுக்கல்: பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு, கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயச்சந்திரன், தனது மனைவி மற்றும் பெண் குழந்தையுடன் சென்றார். பழனியில் உள்ள அவரது உறவினர்களுடன் முடி காணிக்கை செலுத்தி விட்டு குடும்பமாக படிப்பாதை வழியாக மலைக்கோயிலுக்கு மேலே சென்றனர்.

அப்போது மலை உச்சியை அடையும் முன்பு உள்ள விநாயக கோயில் முன்புறம் ஜெயசந்திரனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் மயக்கம் அடைந்தவரை உடனடியாக அருகில் இருந்த திருக்கோயில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர்கள் காத்திருந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து அங்கு வந்த மருத்துவர்கள் உரிய சிகிச்சை அளிக்காமல் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது. ரோப் கார் மூலமாக மலை அடிவாரத்திற்கு அழைத்துவரப்பட்ட ஜெயச்சந்திரனை அங்கு தயாராக வைக்கப்பட்டிருந்த திருக்கோயில் ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். 

பழனி அரசு மருத்துவமனையில் ஜெயசந்திரனை பரிசோதித்த மருத்துவர்கள் ஜெயசந்திரன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருக்கோயில் ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் வசதி இல்லாததால் பழனி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே ஜெயசந்திரன் உயிரழந்ததாக கூறப்படுகிறது.

சரியான நேரத்தில் திருக்கோயில் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை அளித்திருந்தாலோ அல்லது திருக்கோயில் ஆம்புலன்ஸில் வெண்டிலேட்டர் வசதி இருந்திருந்தாலோ ஜெயசந்திரன் உயிர் பிழைத்திருக்கலாம் என உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர். 

இதே போல் அங்கு அடிக்கடி நடக்கக்கூடிய உயிர் பலி மற்றும் சேதங்களை தடுக்க கோயில் நிர்வாகம் மலைக் கோயிலில் நிரந்தரமாக மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் எனவும் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் ஆம்புலன்ஸ்களை உறுதிபடுத்தவும் பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் கோயில் நிர்வாத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: குமரியில் ஈஸ்டர் கோலாகலம்.. பேராயர் நசரேன் சூசை தலைமையில் சிறப்பு திருப்பலி!

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.