"பன்னீங்க தான் கூட்டமா வரும்; சிங்கம் சிங்கிளா தான் இருக்கும்" - பஞ்ச் உடன் அரசியல் பேசிய தருமபுரம் ஆதீனம்!
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் 16-ஆம் நூற்றாண்டை சேர்ந்த தருமபுரம் ஆதீனத் திருமடம் உள்ளது. ஆதீன வளாகத்தில் 25வது குருமகா சன்னிதானம் அருளாட்சி காலத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் அந்த கூட்டுறவு பண்டகசாலை மூடப்பட்டது.
இந்நிலையில் கூட்டுறவு பண்டகசாலை இயங்கி வந்த அதே இடத்தில் சூப்பர் மார்க்கெட் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று (ஆகஸ்ட் 25) நடைபெற்றது. சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள், கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஊழியர்கள், திருமடத்து பணியாளர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் தரமானதாகவும், விலை மலிவாகவும் விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இதனை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், "தருமபுரம் ஆதீனம் 25-வது குருமகா சன்னிதானம் அருளாட்சி காலத்தில் ஆதீனத்தில் கூட்டுறவு பண்டகசாலை தொடங்கப்பட்டது. அது இப்போது அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு பண்டக சாலைக்கு தேர்தல் நடத்த வேண்டும். எனவே கட்சிகாரர்கள் உள்ளே நுழைந்து விடுவார்கள். நம்முடையது தனி ராஜ்ஜியம், கூட்டாட்சிக்கு போகக்கூடாது. சிங்கம் எப்போதும் தனியாகத்தான் இருக்கும், பன்றிகள் தான் கூட்டமாக இருக்கும். தருமபுரம் ஆதீனம் என்பது தனித்துவம் மிக்கது" என்று பேசினார்.
நேற்று முன்தினம் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான கல்லூரி பவள விழாற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறப்பு விருந்தினராக அழைத்து, இந்த ஆட்சி ஆன்மீக ஆட்சி என புகழாரம் சூட்டி பேசிய நிலையில் இன்று அரசியல் குறித்து பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.