கோவையில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்கள்.. இரவு பகலாக தனிப்படை போலீசார் தீவிர சோதனை! - Covai Special police investigation
🎬 Watch Now: Feature Video
Published : Aug 28, 2023, 8:57 PM IST
கோயம்புத்தூர்: மாநகரில் கடந்த சில நாட்களாக செயின் பறிப்பு சம்பவங்கள், பணப்பறிப்பு சம்பவங்கள், இரு சக்கர வாகனங்கள் திருட்டு சம்பவங்களைத் தொடர்ந்து பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக இரத்தினபுரி, உக்கடம், டாடாபாத், ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவம் ஒரே நாளில் நடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் மாநகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மாநகரில் செயின் பறிப்பு மற்றும் வாகனங்கள் திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவோரை பிடிப்பதற்காக, 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை வலைவீசித் தேடி வருகிறனர். மேலும், குற்ற சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களில் மர்ம நபர்கள் வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, மாநகர் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் என மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். மேலும் உக்கடம், போத்தனூர், ராமநாதபுரம் என பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதன் பின்னர், வாகனங்களில் வருபவர்களிடம் விசாரணை நடத்திய பிறகே செல்ல அனுமதித்து வருகின்றனர். மேலும், திருட்டு சம்பவங்கள் ஏதேனும் நிகழ்ந்தால் தாமதிக்காமல் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்க வேண்டுமென மாநகர போலீசார் ஏற்கனவே பலமுறை அறிவுறுத்திவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.