அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகப் புகார் - விவசாயிகள் பேரணி - நெல் கொள்முதலுக்கு அதிகாரிகள் லஞ்சம்
🎬 Watch Now: Feature Video
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் வேளாண்மை தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் ஆரணியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பசுமை புரட்சி புயல் விவசாய சங்கத்தினர் பேரணி மேற்கொண்டனர்.
ஆரணி டவுன் அண்ணா சிலை அருகே தொடங்கிய பேரணி காந்தி ரோடு, மார்க்கெட் வீதி வழியாக சென்று மாமரம் பேருந்து நிறுத்தத்தின் முன் நிறைவடைந்தது. இப்பேரணியில் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு தேசிய பசுமை புரட்சி புயல் விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் விஜயகீர்த்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. 6 மாத கூட்டுறவு பயிர்க்கடனை ஓராண்டாக நீட்டிப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் திட்டம் சிறப்பானது என கூறிய விவசாயிகள், ஆனால் ஒரு கிலோ நெல்லை எடை போட அதிகாரிகள் ஒரு ரூபாய் லஞ்சம் பெறுவதாக குற்றம்சாட்டினர்.
இது தாய்ப்பாலில் விஷம் கலப்பது போன்றது என்றும் புகார் தெரிவித்தனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றம்சாட்டினர். லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் சாகும் வரை போராட்டம் நடத்தப்படும் என்றும், இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம் எனவும் வலியுறுத்தினர்.
இதையும் படிங்க: பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள்? - சபாநாயகர் அப்பாவு விளக்கம்!