மதுரையில் கோயில் திருவிழாவில் சாமியாடிய குழந்தைகள் வீடியோ - children viral video
🎬 Watch Now: Feature Video
மதுரை: மதுரை அருகே நடைபெற்ற மாரியம்மன் கோயில் திருவிழாவில் குழந்தைகள் சாமியாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. பங்குனி தொடங்கி ஆடி மாதம் வரை கோயில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன் உள்ளிட்ட பெண் தெய்வங்களுக்கான திருவிழா மாதங்கள் இவை.
குறிப்பாகக் கிராமங்களில் குறைந்தபட்சம் 3 நாட்களிலிருந்து 12 நாட்கள் வரை திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அவ்வூரைச் சேர்ந்த மக்களும் அங்கிருந்து வெளியூர்களுக்குச் சென்றவர்களும் ஒன்றாகக் கூடி திருவிழாக்களை நடத்தியும் மகிழ்ச்சியாகக் கண்டுகளிக்கின்றனர்.
இந்நிலையில் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேலமடை பகுதியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 26-ஆவது ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் ஆறாம் நாளில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது, ஒலிபெருக்கியில் ஒலித்த சாமி பாடல்களால் உந்தப்பட்டு பெரியவர்கள் சாமியாடினார்கள்.
அச்சமயம் அங்கிருந்த ஒரு குழந்தை அதீத தெய்வ சக்தியின் உணர்ச்சியினால் சாமியாடத் தொடங்கியது. சற்று நேரத்தில் அங்கிருந்த மற்ற குழந்தைகளும் அதே போல் அருள் வந்து சாமியாடத் தொடங்கினர். பொதுவாகப் பெரியவர்கள் கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடுவது வழக்கம். ஆனால் குழந்தைகளும் அவ்வாறு ஆடியது பக்தர்களிடம் பெரும் பரவசத்தை ஏற்படுத்தியது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பழனி கோயில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. பக்தர்கள் கடும் அவதி!