பட்டாக்கத்தியுடன் சாலையில் ஓடிய ரவுடியை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார்! - news in tamil
🎬 Watch Now: Feature Video
Published : Oct 28, 2023, 8:23 AM IST
சென்னை: பட்டாக்கத்தியுடன் சாலையில் ஓடிய ரவுடியை பொதுமக்கள் முன்னிலையில் போலீசார் துரத்திப் பிடித்து கைது செய்து அழைத்துச் சென்ற சம்பவம், சென்னை சாந்தோம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மதன் என்கிற பல்லு மதன். இவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வடசென்னை பகுதி காவல் நிலையங்களில் உள்ளன. மேலும் இவர் A+ சரித்திரப் பதிவேடு குற்றவாளியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நேற்று (அக்.27) காசிமேடு பகுதியில் இளைஞர்களுடன் ஏற்பட்ட தகராறில் பாட்டிலைக் கொண்டு வீசி மதன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பாக தகவல் அறிந்த காசிமேடு போலீசார், மதனை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன்படி, அவர் சென்னை சாந்தோம் பகுதியில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சாந்தோம் தேவாலயம் அருகே மதன் பதுங்கி இருப்பதைக் கண்டு அவரை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். அப்பொழுது, கையில் பட்டாக்கத்தி உடன் மதன் அங்கு இருந்து தப்பி ஓடி உள்ளார். காவல் துறையினர் அவரை ஓடி பிடித்ததும் சாலையில் படுத்து உருண்டுள்ளார். இதையடுத்து, போலீசார் அவரை பிடித்து கைது செய்து வாகனத்தில் ஏற்றி காசிமேடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.