கோவையில் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலில் நடைபெற்ற தேரோட்டத் திருவிழா..! - மேட்டுப்பாளையம்
🎬 Watch Now: Feature Video
Published : Dec 24, 2023, 8:37 PM IST
கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், அன்னூரில் சுமார் 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த மன்னீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சோழ மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோயிலில் மூலவர் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பது தனிச்சிறப்பாகும். இந்த கோயிலில் மார்கழி மாதத்தில் மன்னீஸ்வரர், அருந்தசெல்வி உடன்மார் திருக்கல்யாணம் மற்றும் திருத்தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டு தேர் திருவிழா நிகழ்ச்சி கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து மன்னீஸ்வரருக்கும் அம்பாளுக்கும் தினந்தோறும் பல்வேறு சிறப்புப் பூஜைகள் நடைபெற்று, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி இன்று (டிச 24) நடைபெற்றது.
இந்த தேரோட்ட நிகழ்ச்சியினை ஒட்டி மணக்கோலத்தில் மன்னீஸ்வரர் மற்றும் அருந்தசெல்வி தயார் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்களின் அரோகரா கோஷம் முழங்கத் திருத்தேர் கோயில் வளாகத்திலிருந்து வடம் பிடித்து இழுத்து வரப்பட்டது.
அன்னூர் தர்மர் கோயில் வீதி, சக்தி சாலை, ஓதிமலை சாலை என கோயிலைச் சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளில் வலம் வந்து, தேர் நிலையை அடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அன்னூர், மேட்டுப்பாளையம், அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.