டெம்போ வேனுக்குள் புகுந்த பைக்; அசுர வேகத்தில் வந்த காரால் ஏற்பட்ட விபத்து; நெஞ்சை உலுக்கும் சிசிடிவி காட்சிகள்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அம்பராம்பாளையம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (36). இவர் தனது 10ஆம் வகுப்பு படிக்கும் மகன் அஜ்மலை (15), திருச்சியில் நடைபெறும் கபடி போட்டிக்கு அனுப்பி வைப்பதற்காக, கோயம்புத்தூர் நவக்கரை பகுதியில் உள்ள பயிற்சியாளரிடம் அஜ்மலை விட தனது இரு சக்கர வாகனத்தில் நேற்று (ஜூன் 24) மாலை அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், பொள்ளாச்சியில் இருந்து வேலந்தாவளம் வழியாக வந்த ஜாகிர் உசேன் கே.ஜி.சாவடி அருகே வந்த போது, எதிரே அதிவேகமாக வந்த கார் மீது மோதியதில் இரு சக்கர வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டனர். இதில் இருசக்கர வாகனம் சுமார் 10 அடி உயரத்திற்கு மேல் தூக்கி வீசப்பட்டதில் ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மகன் அஜ்மல் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடினார்.
இச்சம்பவத்தில் தூக்கி வீசப்பட்டதில் இரு சக்கர வாகனத்துக்குப் பின்னால் வந்த டெம்போ வேனின் முன்பகுதியில் கண்ணாடியை உடைத்துக் கொண்டு புகுந்தது. இதனால், வேனில் வந்தவர்கள் சிறு காயங்களுடன் தப்பினர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு ஆம்புலென்ஸ் மூலம் கோயம்புத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஜாகிர் உசேனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை அடுத்து விபத்து தொடர்பாக கே.ஜி.சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தற்போது இந்த விபத்தின் பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.