முத்தப்புடையான்பட்டி ஜல்லிக்கட்டு - காளை காயம்.. பாசத்தில் கதறி அழுத உரிமையாளர்!
🎬 Watch Now: Feature Video
திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த முத்தப்புடையான்பட்டியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா ஆலயத் திடலில் இன்று (ஏப்ரல் 23) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் ஆர்டிஓ முருகேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து, முதலாவதாக உள்ளூர் கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டு, அதன் பின்னர் திண்டுக்கல், புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டன.
போட்டியில் பங்கேற்ற வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டு காளைகளை அடக்கத் தொடங்கினர். மேலும், போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் பீரோ, கட்டில், எல்இடி டிவி, அண்டா மற்றும் சில்வர் குடம் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான பாதுகாப்புப் பணியில் சுமார் 300க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர்.
இந்தப் போட்டியின்போது, முதலாவதாக அவிழ்த்து விடப்பட்ட கோயில் ராமச்சந்திரன் என்பவருடைய காளை, அருகே உள்ள திண்டுக்கல் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சென்றபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியே திருச்சி நோக்கி சென்ற காரில் மோதியதில் காளையின் காலில் முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்தது. இதனையடுத்து கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டு, காளைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே காளையின் உரிமையாளர் கதறி அழுத நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.