ஒரே நேரத்தில் 5,000 பேர் நடனம்; உலக சாதனையாக பதிவு செய்த டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டுஸ்! - டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டுஸ்
🎬 Watch Now: Feature Video
மயிலாடுதுறை: கடந்த மாதம் சீர்காழியில் சட்டநாதர் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் நடைபெற்ற நாட்டிய திருவிழாவில் ஒரே நேரத்தில் 5,000 மாணவ மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். இதை டிவைன் வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு (The Divine World Book of Records) உலக சாதனையாக பதிவு செய்தது. உலக சாதனைப் படைத்த சான்றிதழ்களை அதன் தலைவர் கிருத்திகா தேவி திருவிழாவின் நிறைவு நாளான (ஜூன் 10) நேற்று பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சியின்போது தருமபுரம் ஆதீனத்திடம் நேரில் வழங்கினார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனத்தில் குருபூஜை விழா மற்றும் ஞானபுரீஸ்வரர் ஆலய வைகாசி பெருவிழா கடந்த 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நாளான 11ஆம் நாள் திருவிழாவாக ஆதீன மடாதிபதி சிவிகை பல்லக்கில் பட்டினப் பிரவேசம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தவகையில், தருமபுரம் ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை பக்தர்கள் மற்றும் மடத்து சிப்பந்திகள் சிவிகை பல்லக்கில் நான்கு வீதிகளில் சுமந்து வந்தனர். இறுதியாக ஆதீன மடாதிபதியின் ஞான கொலுக்காட்சி நள்ளிரவு விமரிசையாக நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து, பீடத்தில் அமர்ந்த ஆதீன மடாதிபதிக்கு பாவனை அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இறுதியாக விழாவில் பங்கேற்ற சூரியனார் கோயில் ஆதீனம், திருப்பனந்தாள் காசி மடத்து இளவரசு சுவாமிகள் உள்ளிட்டவர்களுக்குத் தருமபுர ஆதீன குருமா சன்னிதானம் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இவ்வாறு விடிய விடிய நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று காணிக்கை செலுத்தி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.
இதற்கிடையே, மனிதனை மனிதன் சுமந்து செல்லும் இந்த தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய கம்யுனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளும், பல இயக்கங்களும் இத்தகைய மூட நம்பிக்கைகளை பின்பற்றக்கூடாது என கோஷங்கள் எழுப்பியதோடு, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தருமபுரம் ஆதீன திருமடத்தில் பட்டணப்பிரவேச விழா கோலாகலம்!