தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் உ.பி.யில் உயிரிழப்பு; ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம்
🎬 Watch Now: Feature Video
திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர், கௌரிசங்கர். இவருக்கு திருமணமான நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய ராணுவத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் பணியாற்றி வந்த கௌரிசங்கர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் அங்குள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், கடந்த 18ஆம் தேதி கௌரிசங்கர் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து கௌரிசங்கரின் உடல் உத்தரப்பிரதேசத்திலிரிந்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த ஊரான வாணியம்பாடி அடுத்த திகுவாபாளையம் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் கௌரிசங்கரின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர்கள் தேசியக்கொடி போர்த்திய கௌரிசங்கரின் உடலை ராணுவ மரியாதையுடன், அவரது உறவினர்களிடம் ஒப்படைத்து, பின்னர் இந்திய தேசியக்கொடியை கௌரிசங்கர் மனைவியிடம் ராணுவ வீரர்கள் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து கௌரிசங்கரின் உடலுக்கு கிராம மக்கள் ஒன்று திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ராணுவ வீரரின் உடல் அவர்களது குடும்ப முறைப்படி திகுவாபாளையம் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.