தந்தையை இழந்த போதும் தன்னம்பிக்கையோடு படித்த நெல்லை மாணவன் - 10ஆம் வகுப்பில் 495 மார்க் எடுத்து சாதனை
🎬 Watch Now: Feature Video
திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பகுதியைச் சேர்ந்தவர், மாணிக்கவாசகம். இவரது மனைவி பண்டாரச் செல்வி. இவர்களது மகன் அர்ஜுன் பிரபாகர். திருநெல்வேலி சந்திப்பு பகுதியில் உள்ள நூற்றாண்டுகள் பழமையான அரசு உதவி பெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், அர்ஜூன் பிரபாகர் தந்தையை இழந்துவிட்டபோதிலும் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து பாடங்களை சிறப்பாக படித்து வந்து உள்ளார்.
போதிய குடும்ப வருமானம் இல்லாத நிலையில் தாய் கூலி வேலை செய்து, இவர்களைக் காப்பாற்றி வந்து உள்ளார். குடும்ப செலவிற்கே வருமானம் போதாத நிலையில் படிப்பிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் இவர் படித்த பள்ளியின் ஆசிரியர்கள் செய்து வந்து உள்ளனர். பள்ளி பாடங்களை சிறப்பாக படித்து வந்த அர்ஜுன் பிரபாகர் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி உள்ளார்.
இதற்கான முடிவுகள் இன்று வெளி வந்துள்ள நிலையில், அவர் 495 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்று உள்ளார். தமிழில் 97 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 99 மதிப்பெண்களும், கணிதத்தில் 100க்கு 100ம், அறிவியலில் 99 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 100க்கு 100ம் என சாதனைப் புரிந்து உள்ளார். இரண்டு பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை இல்லாத நிலையிலும், ஏழ்மையான குடும்பச் சூழலிலும், யாரும் படிக்க கட்டாயப்படுத்தாத நிலையிலும் மாணவர் அர்ஜுன் பிரபாகர் அசத்தலான வெற்றி பெற்று உள்ளார். ஆசிரியர்களும் பெற்ற தாயும் பெருமை கொள்ளும் வகையில் அவரது மதிப்பெண்கள் அமைந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல. மகாகவி பாரதியார் பயின்ற பள்ளியைச் சேர்ந்த இந்த மாணவர் மாவட்ட அளவில் முதலாவது இடத்தைப் பெற்று பள்ளியையும், பாரதியையும் தலை நிமிர செய்து உள்ளார்.
இதையும் படிங்க: 78,706 பேர் 10ம் வகுப்பு தேர்வில் தோல்வி.. "அஞ்ச வேண்டாம் துணைத் தேர்வு இருக்கு"