டியூப்களில் பதுக்கி வைக்கப்பட்ட 500 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்.. தலைமறைவாக இருந்த வியாபாரி கைது! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
🎬 Watch Now: Feature Video
வேலூர்: கள்ளச்சாராய ஒழிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அணைக்கட்டு அடுத்த மூலைகேட்டு அருகே உள்ள மலையடிவாரத்தில் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுவதாக, அரசு அறிவித்துள்ள புகார் எண் 10581- க்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் உத்தரவின் பெயரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் மேற்கொண்ட சோதனையில், மேல் வாழைப்பந்தல் பகுதியைச் சேர்ந்த ராஜாமணி (வயது 45) என்பவர் கள்ளச் சாராயத்தை பதுக்கி விற்பனை செய்து வந்தது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடந்து, அவரை கைது செய்த காவல்துறையினர் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 17 டியூப்களிலிருந்து, 500 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்து அதை அழித்துள்ளனர்.
மேலும், தற்போது கைதாகி உள்ள ராஜாமணி என்பவர் மீது ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இத்தனை நாட்கள் காவல்துறையினர் கைகளில் சிக்காமல் தலைமறைவாகவே இருந்து வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது கள்ளச்சாராய வியாபாரி ராஜாமணி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடப்பட்டு, அவரது சொத்துக்களைப் பறிமுதல் செய்யவும் மாவட்ட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.
இதையும் படிங்க: Illicit liquor deaths: விஷச்சாராய பலி விவகாரம் - விசாரணையைத் தொடங்கியது சிபிசிஐடி!