களத்தில் இறங்கிய 'டாப் ஸ்டார்'.. தூத்துக்குடியில் வெள்ள நிவாரணம் வழங்கிய பிரசாந்த்..! - TN Flood
🎬 Watch Now: Feature Video


Published : Jan 4, 2024, 8:53 AM IST
தூத்துக்குடி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரம் பேருக்கு நடிகர் பிரசாந்த் நேற்று (ஜன.3) நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கடந்த டிசம்பர் 17, 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத அதிகனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினர்.
இந்நிலையில், மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் பேருக்கு நடிகர் பிரசாந்த், அரிசி, உடைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், ரசிகர்கள் மற்றும் பெண்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் பிரசாந்த், 'மழையால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சந்தித்து உதவி செய்வது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அந்த பாக்கியத்தை எனக்கு அளித்திருக்கிறார். இந்த மழை வெள்ளத்தில் தமிழக அரசு மற்றும் காவல்துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் தங்கள் குடும்பங்களை மறந்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.
மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. நமது நாடு மிகப்பெரிய நாடு. மேலும், ஒவ்வொரு பேரிடர் காலத்திலும் நாம் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறோம். எனவே, அடுத்தமுறை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று தெரிவித்துள்ளார்.