விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? பள்ளி மாணவர்களுக்கு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு!
🎬 Watch Now: Feature Video
Published : Nov 7, 2023, 1:57 PM IST
தஞ்சாவூர்: தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 12ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும் இதனை பெரியவர்களை விட குழந்தைகள்தான் அதிக ஆர்வமாக எதிர் நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து கும்பகோணம் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு தீயணைப்புத் துறையினர் விழிப்புணர்வு வழங்கினர்.
அதில், தீ தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை, விபத்து ஏற்பட்டால் உடனடியாக தடுக்கும் வழிமுறைகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்து, மாணவ மாணவியர்களுக்கு பயிற்சியும் வழங்கப்பட்டது. குறிப்பாக பலகாரம் செய்யும்போது எண்ணெய் சட்டி மூலம் ஏற்படும் தீ விபத்துக்கள், புஸ்வானம் பாதுகாப்பாக கொளுத்துவது எப்படி, வெடிகள் எப்படி பாதுகாப்பாக வெடிப்பது என்பது குறித்து கும்பகோணம் நிலை அலுவலர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.
பின்னர் எவையெல்லாம் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை என்பது குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்து, அதில் பயிற்சியும் அளித்தனர். மேலும், விபத்து இல்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர்.