ஆசிரியர் நியமனம் என்ற பேரில் சுமார் 3,000 பேரிடம் மோசடி: தொண்டு நிறுவனத்தலைவர் தலைமறைவு! - தலைமறைவு
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: தூத்துகுடி மாவட்டத்தில் ஆதவா தொண்டு நிறுவனம் ஆசிரியர் நியமனம் என்ற பெயரில், சுமார் 3,000 ஆசிரியர்களிடம் பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட நிலையில் அந்நிறுவனத்தின் தலைவர் தலைமறைவாகியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரியில் பாலகுமரேசன் என்பவர், ஆதவா எனும் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசுப் பள்ளி, மாநகராட்சிப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறை ஒத்துழைப்புடன் ஒப்பந்த அடிப்படையில் வேலை பெற்றுத்தருவதாக கூறியுள்ளார்.
அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று கூறி 3,000 ஆசிரியர்களிடம் ரூபாய் 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை என பல கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு நியமனம் செய்துள்ளார். இந்நிலையில் நியமனம் செய்யப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு கடந்த ஏழு மாதங்களாக ஆதவா தொண்டு நிறுவனம் சார்பில் சம்பளம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தைத் தொடர்பு கொண்டனர்.
அப்போது தொண்டு நிறுவனத் தலைவர் பாலகுமரேசன் முறையான பதிலும் அளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து விசாரித்தபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது. இதையடுத்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெண் ஆசிரியர்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் பள்ளி கல்வித்துறை இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்கு உரிய சம்பளத்தைப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், தாங்கள் அளித்த பணம் ரூபாய் 3 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் பணத்தை திரும்பப்பெற்றுத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.