மதுக்கரை வனச்சரகத்தில் பரிதாபமாக உயிரிழந்த பெண் சிறுத்தை! - சுகுமார்
🎬 Watch Now: Feature Video
கோயம்புத்தூர்: மதுக்கரை வனச்சரகம் கேரள மாநிலம், பாலக்காடு வனப் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இது வாளையார் மற்றும் சிறுவாணி அணை நீர் பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ளதால் யானைகள், சிறுத்தை, புலி, காட்டெருமை உள்ளிட்டப் பல்வேறு வன விலங்குகள் இந்தப் பகுதியில் உள்ளன.
மேலும், கேரள மாநிலம், மலம்புழா அணையை ஒட்டி இந்தப் பகுதி அமைந்துள்ளதால் அங்கிருந்து அதிக அளவில் வன விலங்குகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் மதுக்கரை வனத்துறையினர், எட்டிமடை அடுத்த அட்டமலை சரகத்தில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிறுத்தை ஒன்று உயிரிழந்து இருப்பதைக் கண்டறிந்தனர். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்படி இன்று (ஜூலை 17) காலை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார், வனச்சரகர் சந்தியா தலைமையில் அங்கு சென்ற, மருத்துவக் குழுவினர் உயிரிழந்த சிறுத்தையின் உடலை ஆய்வு செய்தனர்.
பின்னர், உயிரிழந்த சிறுத்தைக்கு ஒன்றரை வயது இருக்கலாம் எனவும், அது பெண் சிறுத்தை எனவும் பின் பகுதியில் பலத்த காயங்கள் இருந்தது எனவும் தெரிவித்தனர். மற்றொரு விலங்கு கடித்ததன் காரணமாக காயம் ஏற்பட்டு உயிரிழந்து இருக்கலாம் என உடற்கூராய்வு செய்ததில் தெரிய வந்துள்ளதாக வனத்துறை கால்நடை மருத்துவர் சுகுமார் தெரிவித்தார். இதனையடுத்து தன்னார்வலர்கள் வனத்துறை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் உயிரிழந்த சிறுத்தையின் உடல் அங்கேயே எரியூட்டப்பட்டது. சிறுத்தை உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வால்பாறையில் உலா வரும் சிறுத்தை வீடியோ வைரல்!