Dindigul: 60 அடி உயர கழுகுமரத்தில் ஏறி அசத்திய இளைஞருக்கு ரூ.5,000 பரிசு! - 60 ft high tree climbing competition
🎬 Watch Now: Feature Video
திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே உள்ள ராமநாதபுரத்தில் ஸ்ரீ மாரியம்மன், காளியம்மன், முத்தாலம்மன், பகவதி அம்மன், பாலமுருகன், செல்வ விநாயகர் கோயில்களின் உற்சவ விழா 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வருடாபிஷேகம் மற்றும் மூல விக்கிரகங்களுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகம் நடந்ததை அடுத்து கரகம் உள்ளிட்டவைகளுடன் வீதி உலா நடந்ததது.
இதைத்தொடர்ந்து நேற்று அம்மன்கள் குடி புகுதல் நிகழ்ச்சியும் சிறப்பு பிரார்த்தனைகளும் நடந்தன. தொடர்ச்சியாக, ஊர்மக்கள் உற்சாகமாக பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதைத்தொடர்ந்தும் மஞ்சள் நீராட்டு விழா இன்று (ஜூலை 11) வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில், ஊர்மக்கள் ஒருவருக்கொருவர் வர்ணப் பொடிகளைத் தூவி, மஞ்சள்நீர் தெளித்து விளையாடினர்.
இதன் பின்னர், முத்தாலம்மனுக்கு பந்தய மரம் ஏறுதல் என்ற 'கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சி' நடந்தது. கோயிலுக்கு முன்பாக நடப்பட்டிருந்த 60 அடி உயர கழுகுமரத்தில் இளைஞர்கள் போட்டிப்போட்டு கொண்டு ஏறினர். அதில் தங்கச்சியம்மாபட்டியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞர் கழுகுமரத்தின் உச்சிவரை ஏறி, அங்கு கட்டியிருந்த நவதானியங்கள், தேங்காய், வாழைப்பழம் அடங்கிய காணிக்கைப் பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கினார்.
அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து அவரை தோள்மேல் தூக்கி, ஊர்வலமாக கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர், அவருக்கு ஊர்மக்கள் சார்பாக சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும், பந்தய மரத்தில் ஏறியதற்கு வெற்றி பரிசாக ரூ.5,000 வழங்கப்பட்டது. இந்த திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.