உணவகத்தில் போதையில் அடிதடி: விசாரிக்க சென்ற காவலரையும் தாக்கிய நபர் கைது! - tenkasi
🎬 Watch Now: Feature Video
தென்காசி: உணவகத்தில் போதையில் அடிதடியில் ஈடுபட்ட நிலையில் விசாரிக்கச் சென்ற காவலர் மீதும் தாக்குதல் நடத்திய இராணுவ வீரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா பணவடலிசத்திரம், காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆராய்ச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர், முத்துப்பாண்டியன். இவர் இந்திய ராணுவத்தில் சிப்பாயாகப் பணிபுரிந்து வருகிறார்.
தற்போது விடுமுறையில் வந்த முத்துப்பாண்டியன் பணவடலிச்சத்திரத்தில் உள்ள பக்ரி மைதீன் என்பவர் ஹோட்டலில் முத்துப்பாண்டியன் மற்றும் அவரது சகோதரர் காசிப்பாண்டியன் மற்றும் உறவினர்கள் ஜோதிராஜ் ராமச்சந்திரன் ஆகியோர் சாப்பிட வந்துள்ளனர்.
குடிபோதையில் வந்தவர்கள் ஹோட்டல் உரிமையாளர் பக்ரி மைதீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ரகளை செய்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து பணவடலிசத்திரம் காவல் துறையினருக்குத் தகவல் கிடைக்கப்பெறவே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பணவடலிசத்திரம் காவல் நிலைய போலீசார், ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீரர் மற்றும் அவரது உறவினர்களிடம் விசாரித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் ராணுவ வீரர் முத்துப்பாண்டிக்கும், காவலர் வள்ளி மணவாளன் என்பவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ஹோட்டல் உரிமையாளர் பக்ரி மைதீன் மற்றும் காவலர் வள்ளி மணவாளன் கொடுத்த புகாரினை அடுத்து ராணுவ வீரர் முத்துப்பாண்டியன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது காவலரும் ராணுவ வீரர் முத்து பாண்டியனும் கைகலப்பில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மேலும் ராஜபோதையில் இருக்கும் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டு, ஆட்டோவில் ஏற்றி செல்லும் போது போதையில் உளறிய காட்சிகளும் வெளியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. காவல் அதிகாரியை தாக்கிய இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.