ஸ்ரீவைகுண்டம் அருகே சாலையோரத்தில் தாலியுடன் கிடந்த 3 அடி உயர அம்மன் சிலை! - today news
🎬 Watch Now: Feature Video
தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள பிச்சனார்தோப்பு சாலை ஓரத்தில் சுமார் 3 அடி உயர அம்மன் கல் சிலை கிடப்பதாகப் பொதுமக்கள் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து உள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவல்துறை உதவி ஆய்வாளர் சேவியர் பிரான்சிஸ் விரைந்து சென்று உள்ளார். அங்குக் கேட்பாரற்றுக் கிடந்த அம்மன் கல் சிலையை எடுத்து ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையம் கொண்டுச் சென்றார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரிடம் 3 அடி உயர அம்மன் சிலையைக் காவல் துறையினர் ஒப்படைத்தனர். அதன் பின்னர் இந்த சிலை குறித்து ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் உள்ள மக்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோயிலிலிருந்து அம்மன் சிலை கடத்தி வரப்பட்டதா?, கடத்தி வரும்போது அம்மன் சிலை தவறுதலாகக் கீழே விழுந்து விட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை ஓரத்தில் இருந்து மூன்று அடி உயர அம்மன் கல் சிலை மீட்கப்பட்ட சம்பவம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.