புதுச்சேரி கடற்கரைச் சாலையில் களைகட்டிய புத்தாண்டு கொண்டாட்டம்! - புத்தாண்டு வாழ்த்துக்கள்
🎬 Watch Now: Feature Video
Published : Jan 1, 2024, 12:07 PM IST
புதுச்சேரி: உலகம் முழுவதும் நேற்று இரவு புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டிய நிலையில், சுற்றுலா நகரமான புதுச்சேரியிலும் புத்தாண்டு கொண்டாட்டம் துவங்கியது. இதனால் அப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. ஏராளமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால், புதுச்சேரியில் உள்ள அனைத்து ஹோட்டல்களிலும் சிறப்பு இசை நிகழ்ச்சிகள் மற்றும் விதவிதமான உணவுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், ஒரு தனியார் ஹோட்டலில் நடிகர் விமல் தனது குடும்பத்துடன் புத்தாண்டைக் கொண்டாடினர்.
புத்தாண்டை முன்னிட்டு கடற்கரைச் சாலைக்குச் செல்லும் முக்கிய சாலைகளில் பகல் 2 மணியில் இருந்தே வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வருவர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுற்றுலாத் துறை சார்பில், காந்தி சிலை முன்பு சிறப்பு இசை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் தடுக்க, ஆயிரக்கணக்காக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும், 150 சிசிடிவிகள் பொருத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டன. இதனிடையே இரவு நேரத்தில் கடலில் இறங்கிக் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு 12 மணிக்குப் புத்தாண்டு பிறந்ததும் உற்சாகத்துடன் அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்கள் தெரிவித்து, அன்பைப் பரிமாறி புத்தாண்டை வரவேற்றனர். அடுத்த 15 நிமிடத்தில் அங்கிருந்த அனைவரையும் போலீசார் விரட்டி வெளியேற்றினர். இதனால் இரவு 12.25 மணிக்கெல்லாம் கடற்கரைச் சாலையில் கூடியிருந்த கூட்டம் முழுமையாக அகற்றப்பட்டு வெறிச்சோடியது.