குளிப்பதற்காக குட்டையில் இறங்கிய சிறுமி பலி: தருமபுரியில் நேர்ந்த விபரீதம் - girl child death
🎬 Watch Now: Feature Video
தருமபுரி: குளிப்பதற்காக குட்டையில் இறங்கிய சிறுமி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசி கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதியினர் திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளனர். இதனையடுத்து இவர்கள் பெண் குழந்தை ஒன்றை தத்து எடுத்து வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த 11 வயது பெண் குழந்தை மற்றும் அதே பகுதியை சேர்ந்த அந்த பெண் குழந்தையின் நண்பர்களோடு மெணசி - விழுதுப்பட்டி சாலையில் உள்ள புளியாங்குட்டைக்கு குளிப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளனர். அப்பொழுது சைக்கிளை நிறுத்திவிட்டு நால்வரும் குட்டைக்கு சென்றுள்ளனர். தண்ணீரில் மீன் இருப்பதை கண்ட அந்த பெண் குழந்தை, மீனை பிடிக்க குட்டைக்குள் இறங்கியுள்ளார்.
எதிர்பாராத விதமாக அந்த பெண்குழந்தை சேற்றில் சிக்கி தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்ட அந்த குழந்தையின் தோழிகள் மூன்று பேரும் கரைக்கு வந்து இது குறித்து அக்கம் பக்கத்தினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த பொதுமக்கள், பாப்பிரெட்டிபட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தீயணைப்பு துறையினர் வருவதற்குள் பொதுமக்களே சிறுமியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒருமணி நேரத்திற்கு மேலாக குட்டைக்குள் தேடினர். பின்னர் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, 8 அடி ஆழத்தில் சேற்றில் சிக்கியிருந்த சிறுமியின் உடலை தீயணைப்பு வீரர்கள் பிரசாந்த், துரை இருவரும் மீட்டனர்.
இதனையடுத்து சிறுமியின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பாப்பிரெட்டிபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பாப்பிரெட்டிப்பட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குட்டையிலுள்ள சேற்றில் சிக்கி சிறுமி உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Coimbatore car blast case: சிறப்பு நீதிமன்றத்தில் மேலும் 5 பேர் மீது NIA குற்றப்பத்திரிக்கை தாக்கல்