108 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு சிறப்பு நிகும்பலா யாகம்.. அமாவாசை சிறப்பு வழிபாடு! - கும்பகோணம் மேலக்காவேரி
🎬 Watch Now: Feature Video
தஞ்சாவூர்: கும்பகோணம் மேலக்காவேரியில் அமைந்துள்ள பிரகன்நாயகி சமேத பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பழமையான சிவாலயம் என கூறப்படுகிறது. மகா பிரளய காலத்திற்கு பின் உலகை சிருஷ்டிக்க, பிரம்மா ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ததுடன், அதன் அருகில் ஒரு தீர்த்தத்தையும் ஏற்படுத்தி வழிபட்டார், அதுவே பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்ம தீர்த்தம் ஆகும்.
இத்திருக்கோயிலில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி பிரம்மாவும், ஸ்ரீதேவி, பூமிதேவி சமேதராய் ஸ்ரீனிவாச பெருமாள் வடக்கு நோக்கியும், சத்ரு நிவர்த்தி, மகாமங்கள பிரத்தியங்கிரா தேவி தெற்கு திசை நோக்கியும் தனித்தனி சன்னதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். மகாமங்கள பிரத்தியங்கிரா தேவிக்கு, மாதம் தோறும் அமாவாசை தின இரவுவேளையில் விசேஷ நிகும்பலா யாகம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வைகாசி மாத அமாவாசையான நேற்று (மே 19) இரவு வழக்குகளில் வெற்றி பெறவும், சத்ரு உபாதைகள் நீங்கவும், தொழில் மேன்மை பெறவும், உத்தியோகம் கிடைக்கவும், பணி உயர்வு கிடைக்கவும், திருமணம் கைகூடவும், நன்மக்கள் பேறு கிட்டவும் வேண்டி 108 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு விசேஷ நிகும்பலா யாகம் நடத்தப்பட்டது.
முன்னதாக சுவாமி, அம்பாள் மற்றும் பிரத்தியங்கிரா தேவி ஆகியோருக்கு என மூன்று கடங்களில் புனித நீரை நிரப்பி ஸ்தாபிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து இதன் பூர்ணாஹதியில் பட்டு வஸ்திரங்கள், மட்டை தேங்காய், பூ மாலைகள் சமர்பிக்கப்பட்ட பிறகு பஞ்சார்த்தி செய்யப்பட்டது.
பின்னர், மகா மங்கள பிரத்தியங்கிரா தேவிக்கு, எண்ணெய் காப்பு சாற்றி, திரவியப்பொடி, மாப்பொடி, மஞ்சள்பொடி, பால், தயிர் சந்தனம் முதலிய பொருட்களை கொண்டும், புனித நீர் நிரப்பிய கடங்களில் இருந்து மகா அபிஷேகமும் செய்விக்கப்பட்டது. அதன் பிறகு, விசேஷ பட்டு மற்றும் மலர் அலங்காரத்தில் கோபுர ஆரத்தி செய்த பிறகு, 16 விதமான சோடஷ உபசாரங்களும் செய்யப்பட்டது.
பின் பக்தர்களின் வேண்டுதல்கள் நிறைவேற, அவர்கள் ஒவ்வொருவர் கையிலும் மந்திர புஷ்பங்கள் வழங்கப்பட்டு, சிறப்பு கூட்டுப் பிராத்தனைகள் செய்த அந்த புஷ்பங்கள் பிரத்தியங்கிரா தேவி பாதத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர் பஞ்சார்த்தி செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
இதையும் படிங்க: திருவிழாவில் குறிப்பிட்ட சமூகம் புறக்கணிப்பா? வட்டாட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு