சென்னை: வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுகளால் ஏற்படும் மூச்சு குழாய் தொடர்புடைய நோய்களில் ஒன்று தான் நிமோனியா. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை என அனைத்து வயதினரும் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனர். நிமோனியா பாதிப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, நிமோனியா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நோக்கத்தில் ஆண்டுதோறும் நவம்பர் 12ஆம் தேதி உலக நிமோனியா தினமாக அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனத்தின் தகவலின் படி 2019ஆம் ஆண்டு 5 வயதுக்கு உட்பட்ட 7 லட்சத்து 40 ஆயிரம் குழந்தைகள் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும், கரோனா நோய்த்தொற்று காலத்தில் உலக அளவில் 2.5 லட்சம் நபர்களுக்கு மூச்சு குழாய் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிமோனியா ஏற்படுவதற்கான காரணிகள்: நிமோனியா நோய் ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளாக இருப்பது காசநோய். குறிப்பாக இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிமோனியாவால் பாதிக்கப்படுகின்றனர். குறைந்த சமூகப் பொருளாதார நிலை, நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த மது அருந்துபவர்கள், புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்களிடையே நிமோனியா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நிமோனியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வீட்டில் அல்லது வேலை பார்க்கும் இடத்தில் போதிய காற்றோட்டம் இல்லாமல் இருப்பதும் நிமோனியா பாதிப்பு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கிறது.
நிமோனியா அறிகுறிகள்: நிமோனியா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்,
- பசியின்மை
- இருமல், சளி
- இதயத்துடிப்பு அதிகரித்தல்
- மூச்சுவிடுவதில் சிரமம்
- அதிகப்படியான காய்ச்சல் ஏற்படுதல் சிலருக்கு மார்பு வலி, அவ்வப்போது இருமலில் ரத்தம் வெளியேறுதல் நிமோனியாவின் அறிகுறிகள் என கூறப்படுகின்றன.
பாதிப்பைக் கண்டறிதல்: உடல் முற்றிலும் பாதிக்கப்பட்ட பின்னர் சென்று மருத்துவர்களை நாடும் முன்னரே அவ்வப்போது உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நிமோனியா அறிகுறிகள் உள்ளவர்கள் உடனடியாக நெஞ்சு பகுதி எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நிமோனியா பாதிப்பு உள்ளதா என அறிந்து கொள்ள முடியும்.
சிலருக்கு வித்தியாசமான பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், CT ஸ்கேன் எடுப்பதன் மூலம் நிமோனியாவை எளிதாகக் கண்டறிய முடியும். ரத்தப் பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை (Sputum test) செய்வதன் மூலமாகவும் நிமோனியா பாதிப்பு கண்டறியப்படுகிறது.
வரும் முன் காப்பதே சிறந்தது: புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை விடுத்து, வாழ்க்கை நடைமுறைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வருவதன் மூலம் நிமோனியாவில் இருந்து தப்ப முடியும். அன்றாடம் சாப்பிடும் உணவில் சிறிது மாற்றங்கள் செய்ய வேண்டும், அதிக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் மற்றும் தேவையான வைட்டமின்களை உணவுப் பழக்கத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
நிமோனியா சிகிச்சை: பாக்டீரியாவால் ஏற்பட்ட நிமோனியா தொற்று என்றால் ஆண்டிபயாட்டிக்கள் உபயோகித்து சிகிச்சை வழங்கப்படுகிறது. பாதிப்படைந்தவர்கள் ஓய்வு மற்றும் உடலின் தண்ணீர் அளவை சீராக கடைப்பிடிக்க வேண்டும். மருத்துவர்கள் அறிவுறுத்தல் இல்லாமல் சுயமாக மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: தீபாவளி 2023: பண்டிகை கால உணவுப் பழக்கம்: குழந்தைகள் அதிகமாக உண்பதை தவிர்ப்பது எப்படி?