அண்மை காலமாக குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனைகள் பெருகி வருகிறது. இதிலிருந்தே இந்த பிரச்னையால் பாதிக்கப்படுபவர்கள் அதிகம் என்பதை உணர முடிகிறது. இதனால் பல குடும்பங்களில் மன அழுத்தம், சண்டை சச்சரவுகள் உண்டாகிறது. மருத்துவ துறையின் வளர்ச்சி, புதிய தொழில் நுட்பத்தால் குழந்தையின்மை பிரச்னைக்கு ஐவி எஃப் சிகிச்சை வரப்பிரசாதமாக இருக்கிறது. ஐவி எஃப் சிகிச்சை பற்றி அறியலாம்.
ஐவிஎஃப் சிகிச்சை என்றால் என்ன?
மருத்துவ காரணங்களால் இயல்பாக கருத்தரிக்க முடியாத நிலையில் உள்ள தம்பதியின் கருமுட்டையையும், விந்தணுவையும் உடலுக்கு வெளியே எடுத்து இணைத்து கருவுறச் செய்து மீண்டும் கர்ப்ப பைக்குள் வைத்து சிகிச்சை அளிப்பது ஐவிஎஃப் முறையாகும். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், இயற்கையாக கர்ப்ப பை செய்ய வேண்டிய பணியை செயற்கை முறையில் சோதனை குழாய் மூலம் செய்வதுதான் ஐவிஎஃப் சிகிச்சை.
இந்த நவீன கருத்தரித்தல் முறை நல்ல பயனளிக்கிறது. ஆரோக்கியமான குழந்தை பெற தம்பதியின் வயது, கருமுட்டை, விந்தணுக்கள், கர்ப்ப பை ஆரோக்கியமும் முக்கியம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த சிகிச்சை முறை செய்துகொள்வதற்கான நேரமும், சிகிச்சை செலவும் அதிகம்.
உலக சுகாதார அமைப்பு
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், நான்கில் ஒரு தம்பதியினர் கர்ப்பம் தரிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள்.
சமூகத்தின் பார்வை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் கருவுறுதலில் ஏற்படும் பிரச்னையை வெளிப்படையாக சொல்ல பெரும்பான்மையானவர்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பின்னாளில் கருத்தரிப்பதில் சிரமம் ஏற்படுகிறது என்கிறார்கள் மருத்துவர்கள்.
உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி 120 முதல் 160 மில்லியன் தம்பதியினர் இந்த பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணிக்கின்றனர்.
இந்தியாவில் 40% வெற்றி
இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சைக்கு சட்டப்பூர்வமாக அனுமதியளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதற்காக தனி சட்டம் ஏதும் இல்லை.
கடந்த 20 ஆண்டுகளில், ஐவிஎஃப் சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதனை முறையாக செயல்படுத்த சட்ட நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்கிறார்கள்.
இந்தியாவில் ஐவிஎஃப் சிகிச்சை வெற்றி விழுக்காடு 40% ஆக உள்ளது. இதற்கு தனி சட்டம் ஏதும் இல்லையென்றாலும், ஒவ்வொரு மாநில அரசும் இதற்கான கட்டுப்பாடுகள், நெறிமுறைகளை வகுத்துள்ளது.
இந்த சிகிச்சை முறை பற்றி தெரியப்படுத்தும் நோக்கமாக இன்று (ஜூலை 25) உலக செயற்கை கருத்தரிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: பெருந்தொற்றுக்கு பிந்தைய வாழ்க்கைக்கு நீங்கள் தயாரா?