ரத்தக் கொதிப்பு என்னும் உயர் ரத்த அழுத்த நோய் என்பது உலகம் முழுவதும் பொது சுகாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் மே 17 அன்று "உலக உயர் ரத்த அழுத்தம் தினம்" அனுசரிக்கப்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தின் அறிகுறிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த ஆண்டுதோறும் இது அனுசரிக்கப்படுகிறது.
வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கவழக்கங்களால் உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு உடல்நிலையில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்துவதாக வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை சரியான சமயத்தில் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், இறப்புக்கும் வழிவகுக்கும்.
இதுகுறித்து பிரபல சிறுநீரக சிகிச்சை நிபுணர் மற்றும் சிறுநீரகவியல் துறை பேராசிரியரும் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசையின் துணைவருமான டாக்டர்.செளந்தரராஜன் மக்களுக்குக் கூறும் அறிவுரைகளைக் காணலாம்.
- சராசரி மனிதனின் ரத்த அழுத்தத்தின் அளவு 120/80.
- இது உடல் பருமனாக இருப்பவர்களுக்கு சற்று அதிகமாக இருக்கும்.
- ஒல்லியாக இருப்பவர்களுக்கு சற்று குறைவாக இருக்கும்.
- உடல் எடையைப் பொருத்து ரத்த அழுத்தம் மாறுபடும்.
- பொதுவாக 130/90 மேல் இருந்தால் உயர் ரத்த அழுத்தம்.
- ஆனால், தற்போது 125/85 மேல் இருந்தாலே உயர் ரத்த அழுத்த அறிகுறியாக கருதப்படுகிறது.
ரத்த அழுத்தம் வருவதற்கான காரணங்கள்:
1. மரபு வழி ரத்த அழுத்தம்.
2. சிறு வயதில் ரத்த அழுத்தம் வர சிறுநீரக கோளாறு முக்கியக் காரணம்.
3. நாளமுள்ள சுரப்பிகள் மூலம் ரத்த அழுத்தம் வரலாம்.
4. உடல் பருமன் அதிகமாக இருந்தால் ரத்த அழுத்தம் வரும்.
5. முக்கியமாக மன அழுத்தம் இருந்தால் ரத்த அழுத்தம் வரலாம்.
காலையில் வெறும் வயிற்றில் எடுக்கும் ரத்த அழுத்த பரிசோதனைதான் மிக துல்லிய அளவை காட்டும். குறைவான விலையில் இப்போது ரத்த அழுத்தப் பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன.
ஆகவே, அனைவரின் வீட்டிலும் அவசியம் ரத்த அழுத்த பரிசோதனைக் கருவி மற்றும் உடல் எடை பார்க்கும் இயந்திரத்தையும் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும். கடல் அலை போன்று, காலையிலிருந்து மாலை வரை ரத்த அழுத்தம் மாறுபட்டுக் கொண்டே வரும். முக்கியமாக நம் உடலில் உள்ள உப்புச்சத்து.
'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்ற பழமொழிக்கு ஏற்றவாறு நம் அன்றாடம் எடுத்துக்கொள்ளும் உணவில் சுமார் 20 கிராம் உப்பு சேர்த்துக்கொள்கிறோம். அது தவறானதாகும். நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் உப்புக்கும் ரத்த அழுத்தத்திற்கும் நேரடித் தொடர்பு உண்டு.
மேலும் பேக்கரி பொருள்கள் சிப்ஸ் (chips), பிரெட் (Bread) மற்றும் உப்பு அதிகமாக இருக்கும் ஊறுகாய், போன்ற பொருள்களும் ரத்த அழுத்தத்திற்கு முக்கியக் காரணம். முடிந்த அளவு நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவைக் குறைத்து உடல் நலம் பேண வேண்டும்.
மேலும் வேலைப் பளு, கோபம், எரிச்சல், மன அழுத்தம், புகைப் பழக்கம் போன்றவை பெரும்பாலும் ரத்த அழுத்தம் மாறுபாட்டிற்கான காரணங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசு எடுத்துள்ள சர்வேயில், நகர்ப்புறங்களில் 33% பேருக்கும், கிராமப்புறங்களில் 25% பேருக்கும் ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உதாரணமாக 10 பேரில் 3 பேருக்கு ரத்த அழுத்தமும், 5 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறும் உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்பைத் தவிர்க்க என்ன செய்யவேண்டும்:
- ரத்த அழுத்தம் இருப்பவர்கள் உடல் எடையைக் குறைப்பது மிக அவசியம்.
- உணவில் உப்பின் அளவைக் குறைப்பது அவசியம்.
- பழங்கள், காய்கறிகள், கீரைகள், நவதானியங்கள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- காலை, மாலை இருவேளைகளிலும் யோகா, உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்லது.
- மனதிற்குப் பிடித்த பாடல்கள் கேட்பது சிறந்தது.
- ரத்த அழுத்தம் இருப்பது கண்டறியப்பட்டால் வாழ்நாள் முழுவதும் தினந்தோறும் ரத்த அழுத்த மாத்திரை எடுத்துக்கொள்வது அவசியம்.
ரத்த அழுத்தத்தால் சிறுநீரகம், கண், இதயம், நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். மேலும், திடீர் இதய அடைப்பு மற்றும் வாத நோய், சிறுநீரக செயலிழப்பு வருவதற்கு முக்கியக் காரணம் ரத்த அழுத்தம். ஆகவே, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக்கொண்டு உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.
இதையும் படிங்க: குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு அதிகரிக்கிறதா!- அதிர்ச்சி ரிப்போர்ட்!