சென்னை: இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரத்துடன் இந்தியா போட்டியிட விரும்பினால், இளைஞர்கள் 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறினார். இவருடைய இந்த கருத்து சர்ச்சையானதைத் தொடர்ந்து, பல மருத்துவர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். மேலும் வாரத்தில் 70 மணி நேரம் வேலை என்பது, மன அழுத்தம், பதற்றம், முதுகுவலி, மாரடைப்பு போன்றவற்றை ஏற்பட வழிவகுக்கும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
பழகுவதற்கு கூட நேரம் இருக்காது: பெங்களூருவைச் சேர்ந்த இருதய நோய் நிபுணர் தீபக் கிருஷ்ணமூர்த்தி, தனது X வலைதளப்பக்கத்தில், “ஒரு நாளைக்கு 24 மணி நேரம். வாரத்தில் 6 நாட்கள் வேலை. ஒரு நாளைக்கு 12 மணி நேரம் வேலை, மீதமுள்ள 12 மணி நேரத்தில் 8 மணி நேரம் தூக்கம் என்றால், மீதம் 4 மணி நேரம் இருக்கும்.
பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்திற்கு 2 மணி நேரம் தேவைப்படும். மீதமுள்ள 2 மணி நேரத்தில் பல் துலக்குதல், குளித்தல், சாப்பிடுதல் போன்ற வேலைகள் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 12 மணி நேர வேலை என்பதில், மற்றவர்களிடம் பழகுவதற்கு நேரமிருக்காது. உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இருக்காது. பொழுதுபோக்கிற்கு நேரம் இருக்காது, வேலை நேரம் முடிந்தப்பிறகும், கம்பெனியின் இ-மெயில் மற்றும் அழைப்புகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாரத்திற்கு 48 மணி நேரம் போதும்: நீரிழிவு நோய் மருத்துவர் அம்ப்ரிஷ் மித்தல் தனது X வலைதளத்தில், “வாரத்திற்கு 70 மணிநேர வேலை என்பது விதிமுறையாகவோ அல்லது பரிந்துரையாகவோ கூட இருக்கக் கூடாது. வாரத்திற்கு 48 மணி நேர வேலை என்பதே எதிர்பாக்கப்படும் வேலை நேரமாக உள்ளது. வெற்றியை அடைவதற்காக பலர், வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்துள்ளனர். ஆனால் அதை கட்டாயமாக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.
குழந்தைகளும் பாதிக்கப்படுவர்: குழந்தைகள் நல மருத்துவர் மணினி, “நீண்ட நேரம் வேலை செய்வதால் குடும்பத்தில் பதற்றம் ஏற்பட்டு, குழந்தைகளுக்கு ஆட்டிசம் போன்ற நோயை ஏற்படுத்தும். நீண்ட வேலை நேரம் காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்படுகின்றன. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட வேண்டும். அவ்வாறு செலவிடாத காரணத்தால் மன இறுக்கம் கொண்ட பல குழந்தைகளை பார்க்க முடிகிறது” என்று தனது X வலைதளத்தில் கூறியுள்ளார்.
70 மணி நேர வேலை பேரழிவை தரும்: “கடினமாக உழைக்கச்சொல்லி வறுப்புறுத்துவது பேரழிவை தரக்கூடியதாகும். இன்றைய இளைஞர்கள் வெளிப்புற அழுத்தங்களால் அதிகமாக வேலை செய்கின்றனர். திரு.மூர்த்தி கூறியபடி 70 மணிநேரம் வேலை செய்தால் நிச்சயமாக பாதிக்கப்படுவீர்கள்” என்று இதய நோய் நிபுணர் மருத்துவர் முகர்ஜி மடிவாடா கூறியுள்ளார். உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, வாரத்திற்கு 55 மணிநேரத்திற்கும் மேல் வேலை செய்பவர்களுக்கு 35 சதவீதம் பக்கவாதமும், 17 சதவீதம் இதயநோய் போன்றவை ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறியுள்ளது.
7 இலட்சம் பேர் இறப்பு: உலக சுகாதார அமைப்பு மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) 2021 ஆம் ஆண்டு சர்வதேச சுற்றுச்சூழல் இதழில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டது. அதில், நீண்ட நேரம் வேலையால் ஏற்பட்ட பக்கவாதம் மற்றும் இஸ்கிமிக் இதய நோயால் கடந்த 2016 இல் 7 இலட்சத்து, 45 ஆயிரம் பேர் இறந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. 2000 ஆம் ஆண்டை விட 29 சதவீதம் அதிகம்.
இதையும் படிங்க: தமிழகத்தில் ஆண்டுக்கு 4% அதிகரிக்கும் மார்பக புற்றுநோய்.. மருத்துவர் சுரேஷ் குமார் கூறும் ஆலோசனைகள் என்ன?