ஹைதராபாத்: திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் கசந்து போவது எதனால்? அவற்றுக்கான காரணங்கள் என்ன? அவற்றை களைய மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் என்ன ஆகியவை குறித்து பொதுப் பார்வையில் காணலாம்.
’திருமண பந்தம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர்’ என்றெல்லாம் கூறுவார்கள். ஆனால் அனைவருக்கும் இது அவ்வளவு இன்பமான பயணமாக இருப்பதில்லை. காலத்தில் கலந்து நாமும் பயணிப்போம், வாழ்க்கையின் பாதைகள் முட்களால் ஆனது என பல டயலாக்குகள் நம்மைச் சுற்றி சுழன்று வரும்.
எவை எப்படிச் சுழன்றாலும், யார் என்ன கூறினானும், நிலையான பந்தத்தை உருவாக்க தம்பதிகள் மனதளவில் தயாராக வேண்டும். இதில் முக்கியமானதாக இருப்பது தான் விட்டுகொடுக்கும் தன்மை. இவை இல்லாமல் போனதால் தான், சில ஆண்டுகளிலேயே மண வாழ்க்கை கசந்து போகிறது.
இதனை சரிசெய்ய திருமண பந்தத்தில் இணையும் முன் மணமக்கள் தங்களை மனதளவில் சிலவற்றை புரிந்துகொண்டு தயார்படுத்திக்கொள்ள வேண்டும். எந்த உறவும் மகிழ்ச்சியான பயணத்தை தான் விரும்பும். அந்த விருப்பத்துடன் கீழ்வரும் சில ஐடியாக்களை கடைபிடித்து பாருங்கள்.
எதற்கு வேண்டும் வெளிப்படைத்தன்மை?
ஒருபோதும் உங்கள் துணைக்கு இது பிடிக்கும், இந்த உணவு பிடிக்கும், இந்தப் படம் பார்ப்பது பிடிக்கும் என நீங்களாகவே யூகிக்காதீர்கள். அது அவர்களுக்கு பிடிக்காத விஷயம் எனில் ஆரம்பத்தில் உங்களுக்காக ஒப்புக்கொள்ளலாம்.
போகப்போக அது கோபத்தை, வெறுப்பை உண்டாக்கலாம். எனவே வெளிப்படையாகக் கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. வெளிப்படைத் தன்மை கணவன்-மனைவி உறவில் அவசியமானது.
என்றுமே ஒப்பீடு கூடாது...
மற்றவர்களுடன் உங்கள் துணையை ஒப்பிட்டு எடை போடாதீர்கள். ஒப்பிட்டுப் பேசாதீர்கள். குறிப்பாக ஆண்கள் தன் அம்மாவுடன் ஒப்பிட்டு மனைவியைத் திட்டுவதும் கோபப்படச் செய்வதும் வாடிக்கையான ஒன்று. அதைத் தவிருங்கள். அதேபோல் முன்னாள் காதலன், காதலியுடன் ஒப்பிடுவதைத் தவிருங்கள்.
தேவையற்றதற்கு என்றுமே 'நோ'
ஆரம்ப நிலை என்பதால் கேட்பதற்கெல்லாம் சரி, சரி என சொல்லிப் பழக்கிவிட்டீர்கள் எனில், நாள்கள் செல்லச் செல்ல அது ஆபத்தாக முடியும். எனவே உங்களுக்குப் பிடிக்காத, விருப்பமில்லாத விஷயம் எதுவாக இருந்தாலும் இப்போதிலிருந்தே நோ சொல்லப் பழகுங்கள். அதை தன்மையான முறையில் சொல்லுங்கள்.
நிலையான அன்பைத் தர முயலுங்கள்
ஆரம்பத்தில் அதிக நேரம் கூடவே இருந்துவிட்டு, அடிக்கடி ஃபோன் பேசி பழகிவிட்டு, திடீரென நீங்கள் பேச்சுவார்த்தையைக் குறைத்துக் கொள்வது, உங்களுக்கான நேரத்தை வகுத்துக் கொள்வது அவர்களுக்கு ஒருவித தனிமையை உண்டாக்கும்.
இதனால் நீங்கள் அவர்கள் மேல் அன்பாக இல்லையோ என்கிற எண்ணம் தோன்றும். எனவே ஆரம்பத்திலேயே செலவிடும் நேரத்தை கவனித்து ஒதுக்குக்குங்கள்.
முக்கியத்துவம்
நண்பர்களுடன் நீண்ட நேரம் செலவு செய்வது, துணையுடன் இருக்கும்போதும் போனில் அவர்களுடன் பேசுவது, உறவினர்களுடன் அதிக நேரம் செலவிடுவது ஆகியவற்றை குறைத்துக் கொள்ளுங்கள். திருமணத்திற்கு முன் அவர்கள்தான் உங்களுக்கான உலகமாக இருந்திருக்கலாம். தற்போது உங்கள் துணையும் வந்திருக்கிறார் என்பதை மறவாதீர்கள்.