சென்னை: அதிக உடல் எடை காரணமாக, உடல் எடையைக் குறைக்க ஜிம், வாக்கிங், ஜாக்கிங் போகிறவர்களை பார்க்க முடிகிறது. இவர்கள் ஒரு பக்கம் என்றால், உடல் எடையை கூட்ட முடியாமல், ஒல்லியாக இருக்கும் மற்றொரு தரப்பினர். உடல் எடையைக் கூட்டுவது என்பது எளிதான காரியம் அல்ல. சற்று அதிகமாகவே மெனக்கெட வேண்டும். உடல் எடையை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்பதற்காக துரித உணவுகளை உட்கொள்வது, புரோட்டின் பொடிகளை சாப்பிடுவது, கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது என பலகட்ட முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஆனால் இது போன்ற செயல்கள் உங்கள் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த வகையில் ஆரோக்கியமான முறையில் உடல் எடையை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம். மேலும் உடல் எடையை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தினமும் 6 வேளை சாப்பிட வேண்டும் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
எள்: இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கிணங்க உடல் எடையை கூட்ட நினைப்பவர்கள் உணவில் எள்ளை எடுத்துக் கொள்ளலாம். வீட்டில் எள்ளுப் பொடி அரைத்து வைத்து, சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். எள்ளு துவையல், எள்ளு சட்னி, எள்ளுருண்டை போன்றவற்றையும் சாப்பிடலாம். உடல் சூடு இருப்பவர்கள் எள்ளை தவிர்ப்பது நல்லது.
செவ்வாழைப்பழம்: செவ்வாழைப்பழத்தை ஒரு நாளைக்கு ஒன்று என உட்கொண்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும். மேலும், செவ்வாழைப்பழத்தோடு தேன், பால் கலந்து ஸ்மூத்தியாகவும் குடிக்கலாம்.
பழைய சோறு: உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பழைய சோறு சாப்பிடலாம். அதனுடன் கெட்டி தயிர், நீச்ச தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து அதை குடிக்கலாம். அதனுடன் சின்ன வெங்காயம் பச்சையாக உட்கொள்ளலாம்.
ஹெல்தி ஸ்மூத்தி: இரவில் 4 முந்திரி, 4 பாதாம், 4 அக்ரூட் (வால்நட்), 5 பேரிச்சம்பழம், உலர் திராட்சை சேர்த்து ஊற வைக்க வேண்டும். காலையில், ஊற வைத்த நீருடன், இவற்றை சேர்த்து அரைத்து ஸ்மூத்தியாக குடிக்கலாம். இதனுடன் வாழைப்பழம் அல்லது ஆப்பிள் போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.
தேங்காய் எண்ணெய்: உடல் எடையைக் கூட்ட வேண்டும் என நினைப்பவர்கள் உணவில் தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், எண்ணையை முடிந்த வரை கொதிக்க வைக்காமல் பயன்படுத்த வேண்டும்.
பால் சம்பந்தப்பட்ட பொருட்கள்: பால், தயிர், வெண்ணெய், நெய், சீஸ் போன்றவற்றை சாப்பிடலாம். இவை உடல் எடை அதிகரிக்க உதவும்.
காய்கறிகள்: காய்கறிகளில் பூசணிக்காய், உருளைக்கிழங்கு போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவும்.
கேழ்வரகு: கேழ்வரகை மாவாக்கி, கஞ்சியாகவும் குடிக்கலாம். அதில் வெல்லம் சேர்க்கலாம் அல்லது உப்பு சேர்க்கலாம். அது உங்கள் விருப்பம்.
தேங்காய் பால்: உடல் எடையைக் கூட்ட நினைப்பவர்கள் தேங்காய் பாலை குடிக்கலாம். தேங்காய் பாலை விட தேங்காய் பால் கஞ்சியாக சாப்பிட்டால் மிகவும் நல்லது. தேங்காய் பால் கஞ்சி செய்வதற்கு சிவப்பரிசி, சாப்பாட்டு அரிசி இரண்டில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். தேங்காய் பால் எடுக்கும் போது 2 வது, 3 வது முறை கிடைக்கும் பாலுடன் உடைத்த சிவப்பரிசி அல்லது சாப்பாட்டு அரிசியை சேர்த்து கஞ்சி பதம் வரும் வரை நன்றாக வேக வைக்க வேண்டும். கடைசியாக இறக்க போகும் போது கெட்டியான தேங்காய் பாலை சேர்க்க வேண்டும். இதை குடித்து வந்தால் எளிதில் உடல் எடைக் கூடும்.
உளுந்து: உடல் எடையை கூட்டுவதற்கு உளுந்து பெரிதும் உதவும். தோல் உளுந்தைப் பயன்படுத்தி உளுந்தங்கஞ்சி, உளுந்தம்பருப்பு சாதம் போன்றவற்றை செய்து சாப்பிடலாம்.
நிலக்கடலை: எல்லாராலும் பாதாம், வால் நட் போன்றவற்றை வாங்க முடியாது. ஆகையால் அதற்கு பதிலாக நிலக்கடலையை உணவில் சேர்த்து கொள்ளலாம். நிலக்கடலையை பொடி செய்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறி பொறியலில் நிலக்கடலை பொடியை சேர்த்து சமைக்கலாம். நிலக்கடலைப் பொடியை சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.
மேற்கண்ட வழிமுறைகளை சரியாக பின்பற்றினால், பதினைந்து முதல் முப்பது நாட்களில் கண்டிப்பாக உடல் எடையில் மாற்றம் தெரியும்.
இதையும் படிங்க: நடைபயிற்சி செய்யும் போது இதையெல்லாம் கண்டிப்பா செய்யாதீங்க..!