குழந்தைகளை நேரத்திற்கு சாப்பிட வைப்பது இன்றைக்கும்கூட பல பெற்றோருக்கு கொஞ்சம் டஃப் டாஸ்க். ஏனெனில் கொடுக்கும் உணவை, வயிறு நிறையும் வரையில் சமத்தாக சாப்பிடும் குழந்தைகள் மிகக்குறைவு. சரியாகச் சாப்பிடாத குழந்தைகளை எப்படிச் சாப்பிட வைப்பது எனக் கவலையாக இருக்கிறதா?
சில குழந்தைகள் ஆரோக்கியமான உணவை அறவே ஒதுக்கிவிட்டு நொறுக்குத் தீனிகளை மட்டும் விரும்புவர். ஆனால், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்குப் பின்னர் அவர்களைத் திட உணவையும் உண்ண வைப்பது அவசியம்.
குழந்தைகளின் உண்ணும் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்ய அவர்களுக்கு ஏற்ற உணவுகளைத் தயாரித்து அளிக்கவேண்டும் என்கின்றனர், குழந்தை நல மருத்துவர்கள்.
குறிப்பாக உணவுநேரம் குழந்தைகளுக்குத் திகிலாக இல்லாமல் சந்தோஷமான நேரமாக இருக்க வேண்டும் என்கிறார், குழந்தைகள் நல மருத்துவர் விஜயானந்த். உணவைக் கட்டாயப்படுத்திக் கொடுப்பதாலேயே குழந்தைகள் உணவை வெறுக்கின்றனர். ஒருவேளை நீங்கள் குழந்தைக்குப் பசியில்லாத நேரம்கூட உணவை ஊட்டியிருக்கலாம். குழந்தைக்குப் பால் கொடுப்பதற்கும் மற்ற திட உணவுகளை அளிப்பதற்கும் இடைவெளி இருக்க வேண்டும்.
குழந்தைகளை சாப்பிட வைக்க சில டிப்ஸ்!
- பாலுக்கும் திட உணவுகளுக்கும் இடையில் சமநிலை இருக்க வேண்டும். குழந்தைக்கு உண்ணும் உணவு திகட்டாமல் இருக்க வேண்டும். குழந்தைப் பிறந்த 6 மாதங்களுக்குப் பின்னர் கொடுக்கும் பாலின் அளவைக் குறைத்து, மெதுவாக அவர்களுக்கு திடப்பொருட்களைக் கொடுக்கத் தொடங்க வேண்டும். இப்படி செய்வதால் குழந்தைகள் வளரும்போது திடப்பொருள்களின் அளவை அதிகரிப்பது எளிதாக இருக்கும்.
உதாரணமாக, குழந்தையின் 1 வயதிற்குப் பின்னர் 24 மணி நேரத்தில் 400 மில்லி பால் எடுத்துக் கொள்ளலாம். உணவு தயாரிப்பதை குழந்தைகளைப் பார்க்கச் செய்யவேண்டும். இப்படி செய்வதால், அவர்களுக்கு உணவின் மீது சுவாரஸ்யம் பிறக்கும்.
6 முதல் 12 மாதங்கள்
அவர்களுக்காக நீங்கள் தயார் செய்யும் உணவைக் குறித்துச் சொல்லுங்கள். அதைத் தயாரிக்கும்போது அது குறித்து அவர்களிடம் கலந்துரையாடுங்கள்
ஒரு வயது (அ) அதற்கு மேற்பட்டவர்கள்
- குழந்தைகள் நடக்கப் பழகி, விளையாடும் பருவத்தில் காய்கறிகள் / பழங்களைத் தோட்டத்திலிருந்து பறிக்கச் சொல்லி பழக்கலாம். அன்றைய உணவுக்கான காய்கறியை அவர்களையே தேர்வு செய்ய சொல்லலாம்.
- திட உணவுகளை உண்ண குழந்தைப் பழகும்போது விதவிதமான காய்கறிகளையும், பழங்களையும் முடிந்தளவுக்கு கொடுக்க முயற்சி செய்யுங்கள். நார்ச்சத்து உள்ள காய்கறிகள், பழங்கள், பயிறு வகைகள், பருப்பு வகைகள் அதிகம் கொடுப்பது அவசியம். இது குழந்தைகளுக்கு மலச்சிக்கல் வராமல் தடுக்கும். குழந்தை பிறந்த 6 முதல் 12 மாதங்களுக்குள்ளாக அவர்களின் உணவு முறையை மாற்ற வேண்டும்.
- நீங்கள் அசைவம் உண்பவராக இருக்கும்பட்சத்தில் 9 முதல் 12 மாதங்களில் குழந்தைக்கு முட்டை, இறைச்சி ஆகிய அசைவ உணவுகளை அளித்து அதன் மீதான ஈர்ப்பைக் கூட்டுங்கள்.
சாப்பிடும்போது கான்சன்ட்ரேசன் முக்கியம்பா?!
குழந்தைகள் உணவு உண்ணுவதற்காக அவர்களின் கைகளில் மொபைல் போனைக் கொடுப்பது, தொலைக்காட்சியில் கார்ட்டூன்களை இயக்குவது போன்ற செயல்களில் சில பெற்றோர் ஈடுபடுகின்றனர். இது எல்லா வகையிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இவை முழுமையாக குழந்தைகளை உணவு உண்ண அனுமதிக்காது. குழந்தைகளுக்கு வயதாகும்போது அவர்கள் உணவைத் தொடவும், அதனுடன் விளையாடவும், அதை அவர்களே சாப்பிடவும் விடுங்கள்
சாப்பிட லிமிட் டைம்தான்!
நீண்ட நேரம் உணவுக்காக ஒதுக்குவது குழந்தைகளுக்கு மிகவும் வெறுப்பாக மாறும். உணவு நேரம் 30-40 நிமிடங்களுக்குள் இருந்தால் நலம். குறிப்பாக, ஒருவேளையாவது குடும்ப உறுப்பினர்களுடன் உணவு உண்பதைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். வீட்டு அருகாமையில் இருக்கும் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து உணவருந்துவதைப் பழக்க வேண்டும்.
நோ டூ சாக்லேட்ஸ்:
பிஸ்கெட்ஸ், சாக்லேட்டுகள், சிப்ஸ் போன்ற உணவுகளைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுடைய 4 வயது வரை சாக்லேட்டுகள் கொடுக்காமல் இருக்கலாம். மிகவும் அடம்பிடிக்கும் பட்சத்தில் ஒருமுறை கொடுக்கலாம். முடிந்தவரை ஆரோக்கியமான தின்பண்டங்களை உண்ணப் பழக்குங்கள்
குழந்தை பிறந்த 6 முதல் 18 மாதங்களில் அவர்களுக்கு இருக்கும் புரிதல் நிலையின்படி, அவர்களை சாப்பிடக் கட்டாயப்படுத்தினால் அவர்கள் உணவை வெறுக்கும் நிலைக்குத் தள்ளப்படுவர். இதனைத் தவிர்க்க முதலிலேயே குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கம் இருப்பது அவசியம். வீடுகளில் சத்தான உணவுகளைத் தயாரித்து உண்பதனால், அது குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே பழக்கப்பட்டு விடும். குழந்தைகளுக்குப் பெற்றோரே வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இதையும் படிங்க:அடிக்கடி விரதம் இருக்கலாமா? - பேராசிரியர் சீத்தாராம் விளக்கம்