சென்னை: உரையாடல் என்பது தெரிந்தவர்கள், சக ஊழியர்கள் அல்லது அந்நியர்களுடன் நாம் மேற்கொள்ளும் ஒரு பேச்சாடல். ஒருவரோடு ஒருவர் பேசிக்கொள்ளும்போது பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்வோம். அந்த நேரம் மனம் லேசாகும், புதிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம், அவர்களின் அனுபவம் உங்களுக்கு ஒரு பாடமாக அமையும் இப்படிப் பல அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால் சிலர் ஒருவரோடு எப்படிப் பேச ஆரம்பிக்க வேண்டும். அந்த உரையாடலையும், அந்த நபரையும் எப்படித் தக்க வைக்க வேண்டும் என்ற புரிதல் இல்லாமல் பிரச்சனைகளுக்கு வழிவகை செய்து விடுவார்கள். இது பெரும்பாலும், காதல் விவகாரத்தில் அதிகம் நடைபெறுகிறது.
ஒருவரோடு உரையாட வேண்டும் என்றால் முதலில் நீங்கள் அவர் மீதும் அவரது பேச்சின் மீதும் ஆர்வம் காட்ட வேண்டும்; நீங்கள் பேச நினைக்கும் நபரிடம் அக்கறை காட்டுங்கள். அவருக்குப் பிடித்த விஷயங்கள், பொழுதுபோக்கு மற்றும் அவருக்கான தனிப்பட்ட கருத்துகள் குறித்து வெளிப்படையாகக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் ஆம், இல்லை என்பதோடு முடிந்துவிடாத வகையில் இருக்க வேண்டும்.
உதாரணமாக, பயணம் செய்வது உங்களுக்குப் பிடிக்குமா? என்று கேட்பதற்குப் பதிலாக உங்களுக்குப் பிடித்த இடங்கள் எவை.. நீங்கள் பயணம் செய்ய வேண்டும் என்றால் எங்கெல்லாம் செல்வீர்கள் என்று கேட்க வேண்டும். இப்படி நீங்கள் கேட்கும்போது அவரை பற்றி விளக்கிக் கூற நீங்கள் ஒரு வழியை ஏற்படுத்தியதாகவே இருக்கும். மேலும் அது அவரை உங்களோடு பேச ஊக்குவிப்பது மட்டும் இன்றி அவருடன் பேச நீங்கள் ஆர்வமாக உள்ளீர்கள் என்பதைத் தோற்றுவிக்கும்.
சூழல் அறிந்து பேசுதல்; நாம் மற்றவரோடு உரையாட நினைக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய மற்றொரு விஷயம் சூழல் அறிந்து பேசுதல். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவருடன் எப்படிப் பேச வேண்டும். ஒரு பார்ட்டிக்கு சென்றிருக்கும்போது அங்கு ஒரு நபருடன் எப்படிப் பேச வேண்டும்.
ஒரு வணிக மாநாட்டில் தொழில் அதிபர் ஒருவரைச் சந்தித்தால் அவரிடம் என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும், ஒரு அரசியல் கூட்டத்தில் பங்கேற்று அரசியல்வாதியைச் சந்தித்தால் என்ன பேச வேண்டும். பேருந்தில் ஒரு நபரிடமோ, திருமண நிகழ்வில் ஒரு இளம்பெண் அல்லது இளைஞரிடமோ பேச வேண்டும் என்றால் அந்த சூழலுக்கு ஏற்றவாறு அதற்கான கேள்விகளை மட்டுமே கேட்க வேண்டும்.
உரையாடிக்கொண்டு இருக்கும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ஒருவருடன் உரையாடும்போது அவரின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள் அல்லது கவனியுங்கள். பேச்சின் இடையே தேவைக்கு ஏற்ப புன்னகையுங்கள். அவரின் பேச்சுக்குத் தலையசையுங்கள். தைரியமாக நின்று பேசுங்கள் உங்களுக்குள் வரும் படபடப்பு உரையாடலைப் பாதிக்கலாம்.
மேலும், உங்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நபரின் உடல் மொழியைக் கவனத்தில் கொள்ளுங்கள். அவர் பேச்சை விரைந்து பேசினாலோ அல்லது சுற்றிலும் முற்றிலும் பார்த்துப் பேசினாலோ, உரையாடலில் கவன சிதறல் ஏற்பட்டாலோ அவர் உங்களுடனான உரையாடலை முடித்துக்கொள்ள விரும்புகிறார் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.
பேசும் தொனியை கவனத்தில் கொள்ளுங்கள்; நீங்கள் மற்றொருவருடன் பேசும்போது நீங்கள் பேச விரும்பும் விஷம் குறித்து முழுமையாக மனதில் வையுங்கள். அதே போல நீங்கள் பேசும் தொனியில் கவனமாக இருங்கள். நீங்கள் விளையாட்டாக பேசும் சில விஷயங்கள் அல்லது பேசும் தொனியில் ஏற்படும் மாற்றங்கள் உங்களோடு உரையாடும் நபருக்கு தவறான புரிதலை ஏற்படுத்தலாம்.
இதனால் கருத்து வேறுபாடு மற்றும் அசௌகரியங்கள், சங்கடங்கள் ஏற்படலாம். மேலும் அரசியல், மதம் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைக்குறிய தலைப்புகள் குறித்துப் பேசுவதையும், இருவருக்கும் இடையே மனக்கசப்பை உருவாக்கும் பேச்சுக்களை ஊக்குவிப்பதையும் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக , தற்போதைய நிகழ்வுகள், திரைப்படங்கள் அல்லது உணவு போன்ற நடுநிலையான விஷயங்கள் குறித்து பேசலாம்.
நீங்கள் பேசும் தொனியை இயல்பாகவும், நேர்மறையாகவும் வைத்திருங்கள். மேலும், உங்கள் உரையாடலில் மூன்றாம் நபர் குறித்த புகார்கள் மற்றும் வதந்திகளை தவிர்க்கவும். மேலும் உங்கள் பேச்சில் உண்மை உள்ளது என்பதையும், நீங்கள் நம்பிக்கைக்கு உரியவர் என்பதையும் உணர வையுங்கள். பெருமைப் படுத்தி பேசுவதை தவிர்த்துவிட்டு இயல்பான உரையாடலை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் ஒருவருக்கு அர்த்தமுள்ள நபராக உரையாடல் மூலம் உங்களை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
இதையும் படிங்க: Home Remedies for Stomach Pain in tamil: அடிக்கடி வயிறு வலி வருதா.? இதுகூட காரணமா இருக்கலாம்.!