நமது கண்கள் உலகம் முழுவதும் கரோனா வைரசை பரப்புவதிலும், பரவலைத் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
கரோனா வைரஸ் பரவுதலுக்கான முக்கியப் பாதையாக மூக்கு, வாய் அதாவது சளி சவ்வு அமைகிறது. இதற்கான ஆதாரங்களும் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, உலகளவில் காணப்படும் கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாம் நமது கண்களைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் புனேவிலுள்ள ஹெச்.வி. தேசாய் கண் மருத்துவமனையின் மருத்துவர் நிகில் எம். காமத்
வைரஸ் கண்களைத் தாக்கக் கூடுமா?
சாதாரணமாக ஒரு நபர் சளி, தும்மல், பாதிக்கப்பட்ட நபர்களிடம் பேசும்போது தொற்றிற்கு உள்ளாகக்கூடும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இந்த நடவடிக்கைகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் பேசும்போதோ, தும்பும்போதோ அவர்களிடமிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் அருகில் உள்ள நபர்களின் மூக்கு, வாய் வழியாகப் பயணித்து அவர்களும் தொற்றால் பாதிக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. அதேசமயத்தில், பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வெளியேறும் நீர்க்குமிழிகள் அருகில் இருப்பவர்களின் கண்களில் படுமாயின், அதன் வழியாகவும் அவர் தொற்று பாதிப்பிற்கு உள்ளாக வாய்ப்புண்டு. மேலும், சுத்தப்படுத்தாமல் கைகளை அடிக்கடி கண்களில் வைப்பதும் தொற்று பாதிப்பிற்கு வழிவகுக்கும்.
கரோனா கண்களை பாதிக்கும்
உலகெங்கிலும் உள்ள சுகாதார அலுவலர்களின் ஆய்வுப்படி, கரோனா வைரஸ் உள்ளவர்களில் 1 முதல் 3 விழுக்காட்டினர் வரை வெண்படலத்தால் (பிங்க் நிற கண்) பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் கண்களில் கை வைத்துவிட்டு பிற பொருள்களைத் தொடுவதாலும், அவர் பயன்படுத்திய பொருள்களிலிருந்தும் வைரஸ் எளிதாக கண்களுக்குப் பரவுகிறது என்கின்றனர்.
கரோனா வைரசைத் தவிர்க்க பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
கண்கள் வழியாக கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, தகுந்த இடைவெளிகளைக் கொண்டு புதிய விதிமுறைக்கு நாம் எவ்வாறு நம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்பது முக்கியம்.
- கண்ணில் ஏற்படும் அரிப்பு அல்லது கண்களைத் தேய்க்க எண்ணினாலோ அல்லது கண்ணாடிகளை சரிசெய்ய வேண்டும் என உணர்ந்தாலோ, விரல்களை நேரடியாகப் பயன்படுத்தாமல் டிஸ்யூவைப் பயன்படுத்தலாம்.
- வறண்ட கண்களைக் கொண்டிருப்பவர்களுக்கு, மீண்டும் மீண்டும் கண்களைத் தேய்க்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். அதனைத் தவிர்க்கும் வழிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
- குறைந்தது 20 விநாடிகளுக்கு சோப்பு, தண்ணீரில் கைகளைக் கழுவிய பின் மருத்துவ ஆலோசனையின் பேரில் கண்களுக்கு மருந்துகளைப் பயன்படுத்தலாம்.
- அடிக்கடி கை கழுவுவதாலும், கைகளைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருப்பதும் தொற்றுநோய் பரவலைக் குறைக்க உதவும்.
- நீங்கள் சாப்பிடுவதற்கு முன்பும், கழிவறை, தும்மல், இருமல் அல்லது மூக்கை தொட்டதற்குப் பிறகு கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும்.
கண்ணாடிகளை அணியலாம்
காண்டாக்ட் லென்ஸ் அணிந்தவர்கள் சராசரி மனிதர்களைவிட அடிக்கடி கண்களைத் தொடுவர். எனவே லென்ஸ் பயன்படுத்துவோர் கண்ணாடிகளை சிறிது நேரம் மாற்றுவது மூலம் கண் எரிச்சல்களைக் குறைக்கலாம். மேலும், கண்களைத் தொடும் முன் கண்ணாடி இடையூறாக இருப்பதால் அவை சிறிதளவேனும் கைகளைத் தடுக்கும்.
கண்ணாடிகள் அல்லது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது கண்களின் பாதுகாப்பை அதிகரிக்கும். பொது வெளியிலோ அல்லது பாதிக்கப்பட்ட நபர்களைச் சந்திக்கும்போதோ அவர்களிடமிருந்து வெளியேறும் நீர்த்துளிகள் நமது கண்களை அடையாமல் இருப்பதை கண்ணாடி ஓரளவேனும் தடுக்கும். எனவே, கண்களைப் பாதுகாக்க கண்ணாடிகளை அணிவது நடைமுறைக்கு சாத்தியமான சிறந்த யோசனை எனலாம்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் மூளையை பாதித்தால் என்னவாகும்?