கலிபோர்னியா: புகைப்பிடிப்பது உடல்நலனை பாதிக்கும், இது முதல்நிலை பாதிப்பு என்று கூறலாம். இரண்டாம் நிலையாக, புகைப்பிடிப்பவர்கள் வெளியிடும் புகையால் புகைபிடிக்காமலேயே அதை சுவாசிப்பவர்களுக்கும் சுவாசக் கோளாறுகள், புற்றுநோய் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அடுத்தபடியாக மூன்றாம் நிலை ஒன்று உள்ளது. இந்த மூன்றாம் நிலையை தேர்ட்ஹெண்ட் ஸ்மோக் (THS) என்று கூறுகிறார்கள். தேர்ட்ஹெண்ட் ஸ்மோக் என்பது புகைப்பிடிக்கும்போது வெளியேறும் மாசுத்துகள்கள் படிதலை குறிக்கும்.
இதில் நிக்கோட்டின் மற்றும் பல வேதிப்பொருட்கள் இருக்கும். புகைப்பிடித்த பிறகு காற்றின் மூலம் பரவும் இந்த மாசுத்துகள்கள், புகைப்பிடிப்பவர்களின் ஆடைகளிலும், அவரைச் சுற்றியுள்ள பொருட்களின் மேற்பரப்புகளிலும் படிகிறது. சான்றாக வீட்டுக்குள் அமர்ந்து புகைப்பிடிக்கும்போது, ஆடைகள், சுவர்கள், பொருட்கள் என அனைத்தின் மீதும் இந்த துகள்கள் படிகின்றன. இவை சுற்றுப்புறங்களில் நீண்ட காலம் படிந்திருக்கும் என்றும், இந்த மாசுத் துகளால் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் புகைப்பிடிக்காதவர்கள் என இருதரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், இந்த மூன்றாம் நிலை புகைத்தலால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வறிக்கை பிரபல லான்செட் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் நிலை புகைத்தல் காரணமாக தோல்நோய்கள் ஏற்படுவதாக தெரியவந்துள்ளது. வெளிப்புறத்தில் படிந்திருக்கும் இந்த நிக்கோட்டின் துகள்கள் எளிதில் மனிதர்களின் உடலுக்குள் செல்வதாகவும், இவை ரத்தம், டிஎன்ஏ, லிப்பிடுகள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. புகைப்பிடிப்பவர்களுடன் இருப்பவர்களும், அவர்களது பொருட்களை பயன்படுத்துபவர்களும் இந்த மூன்றாம் நிலை பாதிப்புகளுக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.