சென்னை: வீட்டிற்குள் வந்தால் நறுமணம் வீசும், வீட்டை விட்டு வெளியில் போகவே தோன்றாது என்ற காது கவர் வாசகங்கள் மற்றும் கண் கவர் விளம்பரங்களைப் பார்த்து மக்கள் ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்கள் மீது அதீத ஆர்வம் கொள்கிறார்கள். மல்லிகை , லாவண்டர் , ரோஜா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நறுமணம் வீசும் ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதன் நறுமணத்தின் மீது ஆர்வம் கொள்ளும் மக்கள் டின் கணக்கில் வாங்கி சென்று வீடுகளில் அடித்து, அந்த மணத்தை சுவாசித்தவாறே வாழ்கின்றனர். அது மட்டும் இன்றி கழிவறைகளிலும் ஏர் ஃப்ரஷ்னர்கள் பயன்படுத்தப்படுகிறது. இது உங்கள் மூக்கிற்கு வேண்டும் ஆனால் நல்ல நறுமணத்தைத் தரலாம், ஆனால் உடலுக்கு என்னென்ன தீங்குகளை விளைவிக்கும் என்பதைப் பார்க்கலாம்.
ஆஸ்துமா மற்றும் சுவாசப் பிரச்சனைகளுக்கு வழிவகை செய்யும்: ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களில் 20-க்கும் மேற்பட்ட கரிம சேர்மங்கள் அடங்கி இருக்கின்றன. இது உங்கள் அறைகளில் நீரவியாகக் கலந்து சுவாசிக்கும்போது உள்ளே செல்கிறது. இதனால் மூச்சு குழாயில் பிரச்சனை ஏற்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.
ஏற்கனவே ஆஸ்துமா இருக்கும் நோயாளிகள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி இதன் தாக்கத்திற்குப் பெரியவர்களை விடக் குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் பல வகையான கரிம சேர்மங்களை ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களில் சேர்க்கத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வாமை மற்றும் தலைவலிக்குக் காரணமாகும்: ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்கள் மொத்தமாக வைத்திருக்கும் இடங்களில் நீங்கள் நடந்து சென்ற போதும், கார் உள்ளிட்ட வாகனங்களில் வைத்திருக்கும் ஏர் ஃப்ரஷ்னரை சுவாசித்தபோதும் நீங்கள் தலைவலியை உணர்ந்துள்ளீர்களா? உடலில் வாசனைத் திரவியங்களைப் போட்டுக்கொள்ளும்போது கூட சிலருக்குத் தலைவலி ஏற்படுவதாகக் கேட்டிருப்போம். ஏன் ஊது பத்தி மணம் கூட சிலருக்குத் தலைவலியைத் தந்துவிடும்.
இது தற்செயலாக நடக்கும் நிகழ்வு என நீங்கள் நினைக்க வேண்டாம். இந்த நறுமணம், ஆஸ்மோபோபியா என்ற வாசனையின் மீதான வெறுப்பை உடல் உணர்த்தும் நிகழ்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது நம் இரத்த நாளங்களை வீங்கச்செய்வதுடன் அது விரிவடைந்து மூளையில் உள்ள நரம்புகளைத் தூண்டி விட்டு தலைவலியை உருவாக்கும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனால் உங்கள் அன்றாட வாழ்க்கையும், ஆரோக்கியமும் கடுமையாகப் பாதிக்கும்.
தோல் எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படும்: ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களை நாம் தொடர்ந்து பயன்படுத்துவதால் தோல் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் அகாடமி ஆஃப் டெர்மட்டாலஜி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த 2022-ஆம் ஆண்டு வரை அங்குள்ள சுமார் 2.5 மில்லியன் அமெரிக்கர்கள் வாசனை ஒவ்வாமையால் பாதிக்கப்பட்டு வந்துள்ளனர். அரிப்பு, தோல் சிவந்து போகுதல், தோலில் தடிப்பு ஏற்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைக்கு ஆளாகியுள்ளனர்.
இதற்கான காரணம் குறிப்பாக அங்குள்ள மக்கள் வீடுகளை அடைத்துவைத்துக்கொண்டு வெளியில் இருந்து காற்று உள்ளே வராத வகையில் இருப்பதும் இதனால் ஏற்படும் துர்நாற்றத்தைச் சரி செய்ய ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களை பயன்படுத்துவதும்தான் என தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறுகையில் அமெரிக்காவைப் பொருத்தவரை வெளியில் இருக்கும் காற்று மாசுவை விட வீட்டிற்குள்தான் அதிகம் காற்று மாசு இருப்பதாகக் கூறியுள்ளார்.
புற்று நோய் உருவாகக் காரணமாகும்: ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களை நீண்ட காலம் நாம் பயன்படுத்தி வரும்போது அதில் இருந்து வெளியாகும் இரசாயனங்கள் காற்றில் கலந்து புதுவிதமான மாசுவை உருவாக்கி அதனால் தொண்டை, மூக்கு உள்ளிட்ட பகுதிகளில் புற்றுநோய் உருவாகக் காரணமாவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அது மட்டும் இன்றி கண் நரம்புகளையும் இது பாதிப்பதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடந்து வருகிறது.
பிறகு ஏன் இவை சந்தை படுத்தப்படுகிறது என நீங்கள் கேட்கலாம். மக்களின் தேவை அறிந்தே உலக சந்தைகள் இயங்கி வரும் நிலையில் பல ஆயிரம் கோடி செலவு செய்து இயங்கும் நிறுவனங்கள் முடிந்தவரை இரசாயனங்களைக் குறைத்துக்கொள்ள வேண்டுமானால் முயற்சிக்கலாம், ஆனால் இரசாயனங்கள் இல்லாமல் ரூம் ஸ்ப்ரே மற்றும் ஏர் ஃப்ரஷ்னர்களை தயாரிக்கவே முடியாது என்பது நிதர்சனமான உண்மை. மக்கள் தான் தங்கள் ஆரோக்கியத்திற்கு முன் உரிமை வழங்கி எது தேவை, எது தேவை இல்லை என்பதை புரிந்துகொண்டு அதற்கு தகுந்தார்போல் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க: மருதாணியைச் சாப்பிடலாமா? சித்த மருத்துவம் சொல்வது என்ன?