சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மதுரையிலிருந்து ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் நேற்று (நவ.11) சென்னைக்கு வந்தார். பின்னர் விமானத்திலிருந்து இறங்கி வெளியில் வந்து, நிருபர்களை சந்தித்து பேசிவிட்டு அவருடைய காரில் ஏறி அமர்ந்தார். அப்போது, ஓபிஎஸ் தனது சட்டை பாக்கெட்டுக்குள் இருந்த செல்போன் மாயமானதால், பதட்டம் அடைந்தார்.
பின்னர், அங்கிருந்த போலீசாரிடம், செல்போனை விமான நிலையத்திற்குள் உள்ள விஐபி லவூஞ்சில் மறந்து வைத்து விட்டேன் என அதை எடுத்து வாருங்கள் என்று கூறினார்.
உடனே போலீசார் விமான நிலைய மேலாளரிடம் சென்று தகவல் தெரிவித்தனர். ஆனால், லவூஞ்சில் பன்னீர்செல்வத்தின் செல்போன் இல்லை. இதையடுத்து அவர் பயணம் செய்து வந்த ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில் தேடிப் பார்த்தபோது அவர் அமர்ந்திருந்த இருக்கையில் செல்போன் இருந்தது. இதையடுத்து விமான ஊழியர்கள் அந்த செல்போனை எடுத்து விமான நிலைய மேலாளர் அறையில் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: சென்னை மழை: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு!
ஆனால், விமான நிலைய மேலாளர் உடனடியாக அந்த செல்போனை ஓ. பன்னீர் செல்வத்திடம் கொடுக்க முன்வரவில்லை. விமானத்தில் தவறவிட்ட பொருட்களை திரும்பப் பெறுவதற்கு சில நடைமுறைகள் உள்ளன. அதன்படி தான் கொடுக்க முடியும்.. பயணம் செய்த பயணியின் போர்டிங் பாஸ் வேண்டும். அதோடு அந்தப் பொருளை யாரிடம் கொடுக்கக் கூறுகிறார் என்ற சான்று வேண்டும் என்று மேலாளர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் மீண்டும் ஓ. பன்னீர் செல்வத்திடம் வந்து அவர் மதுரையிலிருந்து சென்னை வந்த விமான போர்டிங் பாஸ், அதோடு அவரிடம் கையெழுத்தும் வாங்கிக் கொண்டு மீண்டும் மேலாளர் அறைக்கு சென்றனர்.
போலீசார் செல்போனை மீட்டு வருவதற்கு எப்படியும் சிறிது நேரம் ஆகும் என்பதால், போலீசார் அவரை வீட்டிற்கு செல்லுமாறும், செல்போனை உங்களது வீட்டிற்கு கொடுத்து அனுப்பி விடுகிறோம் என்றும் கூறினர். இதையடுத்து ஓ. பன்னீர் செல்வம் காரில் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
அதன் பின்பு போலீசார் விமான நிலைய மேலாளர் அறையில் முறைப்படியான நடைமுறைகளை முடித்து, செல்போனை சுமார் ஒரு மணி நேரத்தில் வாங்கிக் கொண்டு ஓ. பன்னீர்செல்வம் வீட்டிற்கு கொடுத்து அனுப்பினர். இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
முன்னதாக விமான நிலையம் வந்திறங்கிய ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியுடன் விவாதம் நடத்த தயார் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு, அவர்கள் இரண்டு பேரிடம் தான் அதுகுறித்து கேட்க வேண்டும் என்றார்.
மேலும், அதிமுகவில் மாவட்ட செயலாளர்களை கண்காணிக்க கள குழு அமைக்கப்பட்டு உள்ளது பற்றி கேட்டதற்கு, அவர்கள் தன்னை தானே நம்பாதவர்கள் என்றார்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்