உடலுறவு போதைக்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துவருகிறது. அதிகப்படியான சிந்தனையும், ஆசையும் அவர்களைத் தவறான பாதைக்கு இட்டுச்செல்கிறது. பல இடங்களில் கொடூரமான பாலியல் வன்புணர்வு சம்பவங்களைப் பார்க்கிறோம்.
எப்போதும் உடலுறவு குறித்துச் சிந்தித்துக்கொண்டிருக்கும் அவர்கள், மீண்டும் மீண்டும் பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என்கிற நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். அவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர்.
உடலுறவு போதை மனநோயா?
ஐ.சி.டி. எனப்படும் சர்வதேச நோய்களின் பகுப்பாய்வுப் பட்டியல்தான் (International Classification of Diseases -ICD) உலகளவில் அனைத்து நாடுகளிலும் உள்ள நோய்களையும் வகைப்படுத்துகிறது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை உலக சுகாதார அமைப்பால் இந்த வகைப்படுத்துதல் புதுப்பிக்கப்படும்.
விரைவில் வெளியாகவுள்ள ஐ.சி.டி.யின் 11ஆவது பகுப்பாய்வுப் பட்டியலில் இதுவரை சேர்க்கப்படாத உடலுறவு அடிக்ஷன் எனப்படும் கட்டாய பாலியல் நடவடிக்கையை ஒரு மனநோய் என வகைப்படுத்தி இணைத்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஐ.சி.டி. 11 கூற்றுப்படி, ஒரு நபர் ஆறு மாதங்களைத் தாண்டியும் தொடர்ந்து உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்ற போதையுடன் வாழ்ந்தால், அவர் மனநோயாளி என அழைக்கப்படுவார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்காக மனநல மூத்த மருத்துவர் வீணா கிருஷ்ணனை அணுகினோம்.
ஆபாசப் படங்கள் அதிகமாக பார்த்தல்
அவர் கூறுகையில், "இத்தகைய நபர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பதிலும், சுய இன்பம் காண்பதிலும் அடிமையாகி இருப்பார்கள்.
பல சந்தர்ப்பங்களில், அதிகப்படியான உடலுறவு போதை, அவர்களை பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்ல வைக்கிறது. இதை ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறினால், அந்நபர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவதை அவர்களாலேயே தடுத்திட இயலாது.
காரணம் என்ன?
தொடர்ச்சியாக ஆபாச படம் பார்ப்பது, ஆரோக்கியமற்ற ஹார்மோன்கள், மனச்சோர்வு, கவலை ஆகியவை உடலுறவில் நம்மை அடிமையாக்கிட அதீத வாய்ப்புள்ளது.
அதேபோல, தற்போது ஓடிடி தளங்களில் பல வெப் சீரிஸ்களில் ஆபாச காட்சிகள் தணிக்கையின்றி வெளியாவதால், அவையும் மனநோய்க்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பாதிப்பின் அறிகுறிகள்
- எப்போது உடலுறவு குறித்துச் சிந்தித்துக் கொண்டிருப்பது
- பல பெண்களுடன் திருமணத்தைத் தாண்டிய உறவில் இருப்பது
- பெரும்பாலான நேரத்தை ஆபாசப் படம் பார்ப்பதில் செலவிடுவது
- பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வது
- சுய கட்டுப்பாடு இருக்காது
- சுயஇன்பம் காணுவதில் அடிமையாகி இருப்பீர்கள்
எப்படிச் சமாளிப்பது?
இந்தப் போதையைப் பலவிதமான மருத்துவ முறைகள், தியானம் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து-விடலாம். இவை மனதளவில் அந்நபரை வலிமைப்படுத்தி, உடலுறவு போதையிலிருந்து மீண்டுவர உதவுகிறது.
இந்த மருத்துவ முறைகளானது, அந்நபர்களின் சிந்தனையை மாற்றிட உதவுகின்றன. இது தவிர, மருந்துகளின் உதவியுடன் பாலியல் தூண்டுதலைக் குறைத்து, மனத்தை அமைதியாக்கிட முடியும்" எனக் கூறுகிறார்.
இதையும் படிங்க: உடலுறவுக்கு நோ சொன்னால் இந்தப் பாதிப்பெல்லாம் வருமாம்... உஷார்!