இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தான் தற்போதைய நம்பிக்கையாக உள்ளன. குறிப்பாக, லேசான அறிகுறிகள் உடைய நபர்களுக்கு சுய தனிமை பரிந்துரைக்கப்பட்டது. இதுதொடர்பாக சில விவரங்களை மருத்துவர் ராஜேஷ் வக்குலா நம்முடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
சிறிய வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாதவர்கள் விடுதிகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளலாம். லேசான அறிகுறி உடையவர்கள் ஒரு படுக்கையறை மற்றும் ஹால் உடைய சிறிய அறையில் இரண்டு வாரங்கள் தங்களைத் தனிமைப்படுத்துக் கொள்வது நோய் பரவாமல் தடுக்கும்.
கரோனா பாதித்தவர்களுக்கு...
- ஒருவேளை சிறிய வீடாக இருந்தால் பிபிஈ கவசத்தால் வீட்டை மூடி கரோனா பரவலைத் தடுக்கலாம்
- ஒருவேளை நீங்கள் பிபிஈ உடையை அணிந்திருந்தால் அந்த உடையை மாற்றுவதற்கென தனி அறை இருக்க வேண்டும். இந்த அறையை 4 மணி நேரத்திற்கு ஒருமுறை சுத்தப்படுத்தவேண்டும்.
- பிபிஈ உடையை அப்புறப்படுத்துவதற்கு முன்பாக அதனுடைய வழிமுறைகளை கவனமாகப் படித்து பின்பற்ற வேண்டும். இதனைப் பொதுகழிவுகளுடன் அல்லாமல், தனியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.
- வீட்டின் ஒருபகுதிக்குள் மட்டும் புழங்குவது சாலச் சிறந்தது. கழிவறை இணைப்புள்ள அறைக்குள் தனிமைப்படுத்திக் கொள்வதால் தொற்று பரவுவதைத் தடுக்கலாம்.
- குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சுகாதாரத்தைக் கடைபிடிப்பது கட்டாயம்.
- எப்போதும் முகக்கவசம், கையுறை ஆகியவற்றை அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இடைவெளிக்குள் அடிக்கடி கைகளைக் கழுவுங்கள்.
- சத்தான உணவு வகைகளை உண்ணுவது அவசியம்.
- மூச்சு விடும் நேரம், ஆக்சிஜன் அளவு, நாடித்துடிப்பு, உடல் வெப்பம் போன்ற உடல்நலக் காரணிகளை கண்காணியுங்கள்.
- ஒருவேளை உங்களது உடல்நிலை மோசமடைவதை உணர்ந்தீர்களானால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
- ஆழ்ந்த உறக்கம், நிம்மதியான மனநிலை, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது முக்கியம்.
- நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விட்டமின் தொடர்பான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
குடும்ப உறுப்பினர்களுக்கு...
- கரோனா பாதிக்கப்பட்டு தனிமையில் இருப்பவர்களை குடும்ப உறுப்பினர் ஒருவரைத் தவிர யாரும் அணுகக்கூடாது. உணவு, நீர் போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே இவர் தனிமைப்படுத்தப்பட்டவர் அறைக்குச் செல்ல வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் அறைக்குச் செல்பவர் பிபிஈ பாதுகாப்பு உடையை அணிந்திருக்க வேண்டும்.
- கரோனா பாதிக்கப்பட்டவர் அறையில் இருக்கும் உணவு, மருந்து உள்ளிட்ட கழிவுப் பொருள்களை தனியாகவே அப்புறப்படுத்த வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவரின் அறைக்குள் செல்லாமல் வாசலுக்கு அருகிலேயே அனைத்தையும் கொண்டுச் சேர்க்க வேண்டும்.
- தனிமைப்படுத்தப்பட்டவர் அறையைச் சுத்தப்படுத்த யாரும் செல்லக் கூடாது, அவரே அதனைச் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
- கிருமிநாசினியை உற்பத்தி செய்ய சோடியம் ஹைபோகுளோரைட் பொருள்களை பயன்படுத்த வேண்டும். கல் உப்பு போன்ற சோடியம் ஹைபோகுளோரைடு அடங்கிய பொருள்கள் பயன்படுத்துவதன் மூலம் வைரஸ் பரவாமல் தடுக்கப்படுகிறது.
- ஒவ்வொரு 4 மணி நேரத்திற்கும் ஒருமுறையும் அறையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட நபரின் அனைத்து குப்பைகளையும் தனித்தனியாக அப்புறப்படுத்த வேண்டும். மாநகராட்சி சார்பாக மக்களுக்கு இதுகுறித்து சரியான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.
இதையும் படிங்க:உங்களுக்குக் கரோனாவா? பயப்படாதீங்க...!